ர்மதாபூர்,  சத்தீஸ்கர்

த்தீஸ்கரில் 7 மணி நேரத்தில் 101 பெண்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள நர்மதாபூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இலவச கருத்தடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இங்குக் கருத்தடை செய்துகொள்வதற்காக ஏராளமான மலைவாழ் பெண்கள் வந்திருந்தனர். மருத்துவர் ஜிப்னஸ் ஏக்கா என்பவர் மதியம் 12 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை கருத்தடை அறுவைசிகிச்சைகள் செய்துள்ளார்.

சுமார் 8 மணி நேரம் நடந்த இந்த முகாமில் 7 மணி நேரத்தில் 101 பெண்களுக்குக் கருத்தடை அறுவைசிகிச்சையை மருத்துவர் ஜிப்னஸ் ஏக்கா மட்டும் செய்திருப்பதாகத் தெரியவந்தது.
ஒரே மருத்துவரே இத்தனை பெண்களுக்குக் கருத்தடை அறுவைசிகிச்சை செய்வது விதிமீறல் என்பதால் இது தொடர்பாக சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஒரு மருத்துவர் ஒரு நாளில் அதிகபட்சமாக 30 கருத்தடை அறுவைசிகிச்சைகள் மட்டுமே செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்தடை அறுவைசிகிச்சைகள் செய்த மருத்துவர் சுகாதாரத்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலவச முகாமில் ஏராளமான மலைவாழ் பெண்கள் குவிந்தனர், அவர்கள் தொலைதூர பகுதிகளில் இருந்து வருவதாகவும் தங்களால் மீண்டும் ஒரு முறை சிரமத்துடன் பயணம் செய்து வரமுடியாது என கூறியதால் அனைவருக்கும் அறுவைசிகிச்சைகளைச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவரிடம் கருத்தடை அறுவைசிகிச்சை செய்து கொண்ட யாருக்கும் எந்தவித மருத்துவ ரீதியான சிக்கலும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.