கதுவா
ஓட்டுநர் இன்றி ஒரு சரக்கு ரயில் 75 கிமீ ஓடியது குறித்த விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது.
கடந்த 25 ஆம் தேதி சரக்கு ரயில் ஒன்று ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தின் உச்சி பஸ்சி வரை சுமார் 75 கி.மீ. தூரம், ஓட்டுநர் இல்லாமல் ஓடியது நாட்டையே பரபரப்பாக்கியது. உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு, மணல் மூட்டைகளின் உதவியுடன் ரயில் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த ரயில் மணிக்கு 70 முதல் 75 கி.மீ. வேகத்தில் இயங்கி, ஒன்பது ரயில் நிலையங்களைக் கடந்து சுமார் 75 கி.மீ. தூரம் ஓடிய நிலையில் உச்சி பஸ்சியில் தடுத்து நிறுத்தப்பட்டது. இது குறித்து மத்திய ரயில்வே துறை தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டதால் 5 மூத்த ரயில்வே அதிகாரிகள் கொண்ட குழு விசாரணையில் இறங்கியது.
இதில் முதல்கட்ட விசாரணையில், ஓட்டுநர் மற்றும் ரயில் நிலைய அதிகாரி ஆகியோர் பொறுப்பின்றி இருந்ததே தவற்றுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.. ஆனால் ஓட்டுநர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ‘தான் ஹேண்ட் பிரேக்குகளை போட்டு ரயிலை நிறுத்தி இருந்ததாகவும், மேலும் ரயில் நகராமல் இருக்கச் சக்கரங்களில் மரக்கட்டை தடுப்புகளை வைத்ததாகவும்’ கூறி உள்ளார்.
ரயில்வே விசாரணை அறிக்கையில்
“ஓட்டுநர் இன்றி ஓடிய ரயில், ரயில்வே தளவாடங்களைச் சுமந்து செல்லும் சரக்கு ரயிலாகும். கதுவா ரயில் நிலையத்தில் 53 பெட்டிகளுடன், கார்டு பெட்டி இல்லாத நிலையில் நிறுத்தப்பட்டு காலை 5.20 மணிக்கு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரயில் நிலைய அதிகாரியிடம் ரயிலை ஜம்முவுக்கு எடுத்துச் செல்லுமாறு ஓட்டுநரிடம் சொன்ன போது ரயிலில் கார்டு பெட்டியும், கார்டும் இல்லாததால் ஓட்டுநர் மறுத்துள்ளார்
எனவே ரயிலை நிறுத்திவிட்டு, வேறு ரயிலில் ஜம்மு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டதால் காலை 6 மணி அளவில் ரெயில் நிலைய அதிகாரியிடம் சாவியை ஒப்படைத்து விட்டு ஓட்டுநர் ஜம்மு புறப்பட்டுச் சென்றார். ஆகவே அப்போதிருந்து காலை 7.10 மணி வரை ரயிலில் ஆளில்லை. ”
என்று கூறப்பட்டு உள்ளது.
விபத்து தொடர்பாக பிரோஸ்பூா் கோட்ட ரயில்வே மேலாளர், 6 ரயில்வே அதிகாரிகளைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.