சென்னை

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் மீது அடுத்த வாரம் விசாணை தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரான சூரப்பா மீது பல புகார்கள் எழுந்தன.  அவர் மீது ஊழல், முறைகேடான பணி நியமனங்கள் குறித்து புகார்கள் குவிந்ததால் அவற்றை விசாரிக்கத் தமிழக அரசு முன்வந்தது.  தமிழக அரசு சார்பில் இந்த புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தமிழக உயர்கல்வித் துறையால் நியமிக்கப்பட்டார்.

இந்த விசாரணை தொடர்பாக நீதிபதி கலையரசன் விரைவில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வாவைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது.  தற்போது தீபாவளிக்காக சொந்த ஊருக்குச் சென்றுள்ள நீதிபதி கலையரசன் இன்று சென்னை திரும்ப உள்ளார்.  அதன் பிறகு அவர் ஆலோசனை நடத்தி விசாரணையை அடுத்த வாரம் தொடங்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த ஆலோசனையின் போது கலையரசன் சூரப்பா மீதான புகார்களின் முழு விவரங்களையும் ஆதாரங்களையும் பெற்றுக் கொள்ள உள்ளார்.  அவருடைய விசாரணைக்குத் தேவையான அலுவலகம், பணியாளர்கள், ஊதியம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.  இவை அனைத்தும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.