புதுடெல்லி:
பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யோகா குருவும் பதாஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் அண்மையில், “ அலோபதி என்பது முட்டாள்தனமான அறிவியல், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் கொரோனாவை குணப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டன” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாபா ராம்தேவின் கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது, தோல்வியடைந்தது என பாபா ராம்தேவ் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த கருத்துகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது.

மேலும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஞானத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் சவால் விடுக்கும் வகையில் உள்ளது” என தெரிவித்துள்ளது.

பாபா ராம்தேவின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நவீன மருத்துவ வசதிகளை கலைக்க வேண்டும் அல்லது தொற்று நோய் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

எனவே, இந்திய தண்டனை சட்டம் 188 மற்றும் தொற்று நோய் சட்டம் 3 ஆகியவற்றின் கீழ் பாபா ராம் தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பாபா ராம்தேவின் கருத்து தொடர்பாக விளக்கமளித்துள்ள பதஞ்சலி நிறுவனம், இந்திய மருத்துவ சங்கத்தின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது பாபா ராம்தேவ் அளவுகடந்த மதிப்பு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளது.

தனக்கு வந்த வாடஸ் அப் செய்தியையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் வாசித்ததாக பதாஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.