காலே: இரண்டாவது டெஸ்ட் போட்டின் 2வது இன்னிங்ஸில், இலங்கை அணி மோசமாக விளையாட, இங்கிலாந்து அணி போட்டியை 6 விக்கெட்டுகளில் வென்றுவிட்டது.
முதல் இன்னிங்ஸில், இலங்கை அணி 381 ரன்களை எடுக்க, இங்கிலாந்து எடுத்ததோ 344 ரன்கள். எனவே, 37 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியோ, வெறும் 126 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 163 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்று, இங்கிலாந்திற்கு எளிய இலக்கை நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில், இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லசித் எம்பல்டினியா அடித்த 40 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள். முதல் இன்னிங்ஸில் நன்றாக ஆடிய ஏஞ்சலோ மேத்யூஸ், சந்திமால் மற்றும் டிக்வெலா போன்றவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் ஒன்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
இங்கிலாந்து அணி தரப்பில், டாம் பெஸ் மற்றும் ஜேக் லீச் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஜோ ரூட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன்மூலம், 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி, கோப்பை வென்றுள்ளது இங்கிலாந்து அணி.