லண்டன்: டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கான இலக்காக 338 ரன்களை நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் மிகச்சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். பேர்ஸ்டோ 111 ரன்களை விளாச, ராய் தன் பங்குக்கு 57 பந்துகளில் 66 ரன்களை சேர்த்தார். பென் ஸ்டோக்ஸ் 54 பந்துகளில் 79 ரன்களை குவித்தார். ஜோ ரூட் 44 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துவிட்டது.
இன்றைய போட்டியில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. சஹல் 10 ஓவர்களை வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 88 ரன்களை அள்ளிக் கொடுத்தார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் வீசி, 1 விக்கெட் மட்டுமே எடுத்து 72 ரன்களைக் கொடுத்தார்.
ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு சற்று சிறப்பாக இருந்தது. முகமது ஷமி 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேசமயம் 69 ரன்களை வழங்கினார். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சரியாக 60 ரன்களை வழங்கினார்.
பும்ரா மட்டுமே மிகுந்த சிக்கனத்துடன் பந்து வீசினார். 10 ஒவர்கள் வீசிய அவர், 44 ரன்களை மட்டுமே கிள்ளிக் கொடுத்ததுடன், 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். கேப்டன் விராத் கோலி, கடைசிவரை ஆறாவது பந்துவீச்சாளராக கேதார் ஜாதவை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பெரிய இலக்கை இந்திய அணி எட்டி சாதனைப் படைக்குமா?