புனே: இந்தியாவுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், 330 ரன்கள் இலக்கை விரட்டும் இங்கிலாந்து, 95 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதனால், அந்த அணியின் வெற்றி கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஒருநாள் கோப்பை யாருக்கு என்பதற்கான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, 330 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்கியது. ஆனால், 3 ஓவர்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இங்கிலாந்து பறிகொடுத்தது. ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவை புவனேஷ் காலி செய்தார்.

அதன்பிறகு, சற்று அதிரடி காட்டிய பென் ஸ்டோக்ஸ், ஒரு கேட்ச் வாய்ப்பிலிருந்து தப்பினாலும், நடராஜனின் பந்துவீச்சில் ஷிகர் தவனிடம் சிக்கி 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போதே இங்கிலாந்தின் வெற்றி கேள்விக்குறியாகி விட்டது.

ஏனெனில், இரண்டாவது ஒருநாள் போட்டியில், பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும்தான் இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர். இன்று இருவருமே விரைவில் வெளியேறிவிட்டனர். பின்னர், அணியின் எண்ணிக்கை 95ஆக இருந்தபோது, பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தற்காலிக கேப்டன் ஜோஸ் பட்லர் 15 ரன்களுக்கு ஷர்துல் பந்தில் வெளியேறினார். இதனால், இங்கிலாந்து அணி தற்போது தடுமாறி வருகிறது.