புனே: மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 330 ரன்கள் இலக்கை விரட்டும் இங்கிலாந்து அணி, தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.

துவக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவர்களில் காலிசெய்தார் இந்தியாவின் புவனேஷ்வர் குமார்.

பேர்ஸ்டோ, கடந்த 2 போட்டிகளிலும் பிரமாதமாக விளையாடியவர். கடந்தப் போட்டியில் சதமடித்து, இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இந்தமுறை அவர் வெறும் 1 ரன்னில் புவனேஷ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஜேசன் ராய், முதல் ஓவரிலேயே அதிரடி காட்டிய நிலையில், 14 ரன்கள் எடுத்திருந்தபோது, அதே ஓவரின் கடைசிப் பந்தில் புவனேஷ் பந்தில் பெளல்டு ஆனார்.

புவனேஷ்வர் குமார், தான் இதுவரை வீசிய 2 ஓவர்களின் கடைசி பந்துகளில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவர் மூன்றாவது விக்கெட்டையும் அதேபாணியில் கைப்பற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.