சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்ட நிலவரப்படி, முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது இங்கிலாந்து அணி.
முதல் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள அந்த அணி, 263 ரன்களை சேர்த்துள்ளது.
துவக்க வீரர் ஜோசப் பர்ன்ஸ் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டான் லாரன்ஸ் டக்அவுட் ஆனார். ஆனால், டாம் சிப்ளியும், கேப்டன் ஜோ ரூட்டும் அபார கூட்டணி அமைத்தனர். டாம் சிப்லி இங்கிலாந்தின் சுவராய் நின்றார்.
இன்றைய நாளில், மொத்தம் 286 பந்துகளை சந்தித்த அவர், 87 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானாலும், ஜோ ரூட்டின் இன்னிங்ஸிற்கு பக்கபலமாய் நின்றார். ஜோ ரூட்டைப் பொறுத்தவரை, துவக்கத்தில் சற்று நிதானமாய் ஆடத்தொடங்கி, அதன்பிறகு சரளமான ஆட்டத்திற்கு வந்தார்.
மொத்தம் 197 பந்துகளை சந்தித்த அவர், 1 சிக்ஸர் & 14 பவுண்டரிகளுடன் 128 ரன்களை அடித்து நாட்அவுட்டாக களத்தில் நிற்கிறார்.
இன்றைய நாள், இந்திய பவுலர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையவில்லை. பும்ராவிற்கு 2 விக்கெட்டுகளும், அஸ்வினுக்கு 1 விக்கெட்டும் மட்டுமே கிடைத்தன.