இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீட்டில் இருந்து நகை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் திருட்டுபோனதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பென் ஸ்டோக்ஸ் இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 17ம் தேதி இங்கிலாந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள கேசல் ஈடன் பகுதியிலுள்ள தனது வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
நகை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ஏராளமான தனிப்பட்ட பொருட்களுடன் அவர்கள் தப்பிச் சென்றனர். அந்த பொருட்களில் பல எனக்கும் எனது குடும்பத்திற்கும் உண்மையான உணர்வுபூர்வமான மதிப்பைக் கொண்டுள்ளன.
இந்த கொள்ளை சம்பவத்தில் திருடப்பட்ட சில பொருட்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
கொள்ளை சம்பவத்தின் போது தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் இருந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைப் பற்றிய தகவல் கிடைத்தால் துப்பு கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வாழ்ந்து வரும் நிலையில் வேலை மற்றும் இதர சூழல் காரணமாக வெளியூர் செல்பவர்களின் தகவலை தெரிந்துகொண்டு அவர்களின் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து திருடியதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.