சென்னை,

மிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலந்தாய்வு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களே காலியாக இருக்கும் சூழல் உருவாகி உள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் கடந்த  ஜூலை 17-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் வந்து கலந்தாய்வில் பங்குபெற்று தங்களுக்கு தேவையான கல்லூரிகளையும், பாடங்களையும் தேர்வு செய்து வருகின்றனர்.

கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் சுமார் 25 முதல் 40 சதவிகித மாணவர்கள், கலந்தாய்வுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.

இன்று 17வது நாளாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று  நடைபெற்ற  கலந்தாய்வில், 7 ஆயிரத்து 108 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 4 ஆயிரத்து 85 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதுவரை நடைபெற்ற கலந்தாய்வு காரணமாக  70 ஆயிரத்து 741 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

கடந்த 16 நாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில், விண்ணப்பம் செய்தவர்களில் 37 ஆயிரத்து 468 பேர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.

இன்னும்  நான்கு நாட்களில் கலந்தாய்வு நிறைவடைய உள்ள நிலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவிகித இடங்கள் காலியாகவே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.