திருவனந்தபுரம்: சர்சைக்குரிய காட்சிகளை படமெடுத்து, கோடிகோடியாக கல்லா கட்டிய ‘எம்புரான்’ பட தயாரிப்பு நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தமிழ்நாடு, கேரளாவில் உள்ள அந்நிறுவன அதிபரின்வீடு உள்பட முக்கிய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எம்பூரான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனின் அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தி வருகிறது. அதுதொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கேரளத்தை சேர்ந்த பிரபல சிட்பண்ட் நிறுவனமான கோகுலம் சிட் பண்ட்ஸ் சினிமா படத்தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட எம்புரான படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம்ன, நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு, அபிமன்யு சிங் உள்பட பலர் நடித்து, கடந்த 27ம் தேதி திரைக்கு வந்த படம் ‘எல் 2:எம்புரான்’. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிவேகமாக ரூ.100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை ‘எல் 2 எம்புரான்’ படைத்திருக்கிறது. இதுவரை ரூ.225 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த படத்தில் குஜராத் வன்முறை, முல்லை பெரியாறு அணை தொடர்பாக சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட ஒரு மதத்தை பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்ற நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, தவறுக்கு பொறுப்பேற்று, உடனடியாக அக்காட்சிகளை நீக்குவதாக மோகன்லால் தெரிவித்தார். அதன்படி குஜராத் வன்முறை காட்சிகள் நீக்கப்பட்டன. ஆனால், முல்லை பெரியாறு அணை தொடர்பான சர்ச்சை காட்சிகள் நீக்கப்படவில்லை.
இந்த நிலையில், எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்குச் சொந்தமான, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட் பண்ட் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல கேரளாவல் உள்ள அவருக்கு சொந்த இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுசிறது.
அளவுக்கு அதிகமான வருமானத்தை ஈட்டி வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில் 2017ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற வருமான வரி சோதனையினபோது, கோகுலம் குழுமத்தின் ரூ.1,100 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் சிக்கியிருந்தது. அப்போது, சிக்கியுள்ளது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என கோகுலம் சிட்பட்டின் 78 இடங்கள் மற்றும்ட கோகுலம் குழும அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில் 400க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் கொண்ட குழு விரிவான சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.