சென்னை: ரூ.1000 கோடி அளவில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில், இன்று மீண்டும் டாஸ்மாக் அலுவலகம் மற்றும் சில முக்கிய அதிகாரிகள் வீடுகள், டாஸ்மாக் மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது.
கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் அமலாக்கத்துறையினர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட பல இடங்களில் 3 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையுடன், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்யும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்தியது. இந்த சோதனை யில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கோரிய நிலையில், அவை நிராகரிக்கப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணையை தொடரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, அவ்வப்போது டாஸ்மாக் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும், அமலாக்கத்துறை டாஸ்மாக் நிர்வாகிகள் விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பியது. ஆனால், டாஸ்மாக் முக்கிய அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தனர்.
அதன் தொடர்ச்சியாகவும், டாஸ்மாக் ஊழல் வழக்கு தொடர்பாக இன்று (மே 16) காலை முதல் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை முதல், டாஸ்மாக் அலுவலகம் மற்றும் சில அதிகாரிகளின் வீடு மற்றும் மதுபானங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களில் அமலாக்கத்துசை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் டாஸ்மாக் மேலாளர்கள் சங்கீதா மற்றும் ராமதுரை முருகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது
சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்என்ஜே அலுவலகத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளது.
தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை.
மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள விசாகன் இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.