டெல்லி: ஐ-பேக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அதிரடியாக தலையிட்டு ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரத்தில் மேற்கு வங்க அரசு, முதல்வர் மம்தா பானர்ஜி, காவல்துறை ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மம்தா பானர்ஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் ஐ-பிஏசி மனு மீது உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது, மம்தா பானர்ஜியின் நடவடிக்கையால், சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி உள்ளதாகவும் சுட்டிக்காட்டியது.

அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகம், அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை ஜனவரி 8ம் தேதி சோதனை நடத்தியது. கொல்கத்தாவின் லோடன் தெருவில் உள்ள பிரதிக் ஜெயினின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த மம்தா பானர்ஜி, பல்வேறு ஆவணங்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அமலாக்கத் துறையினரின் இந்த சோதனை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவர்கள் எங்கள் கட்சியின் ஆவணங்களையும் சட்டமன்றத் தேர்தலுக்கான எங்கள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்களையும் கொண்ட ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர். நான் அவற்றை அவர்களிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்தேன்.
அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத்துறையின் கடமையா?. இதற்கும், நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை.’’ என குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. கடந்த 9ம்தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம் இதை விசாரித்தபோது, ஏராளமான வழக்கறி ஞர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பாக ஐ-பேக் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் தலையிட்டு ஆவணங்களை மம்தா பானர்ஜி எடுத்துச்சென்றது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் பிரசாந்த் மிஸ்ரா, விபுல் பஞ்சோலி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அமலாக்கத்துறை விசாரணையின்போது அங்கிருந்த ஆவணங்களை மம்தா பானர்ஜி திருடிச் சென்றுள்ளார். அவருக்கு ஆதரவாக மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இது, மாநில காவல்துறை அதிகாரிகளை இதுபோன்ற வழக்குகளுக்கு உதவவும் தூண்டவும் ஊக்குவிக்கும். எனவே, மேற்கு வங்க டிஜிபி ராஜீவ் குமார் மற்றும் பிற உயர் காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகள் தண்டனைக்குரிய குற்றங்களை வெளிப்படுத்துவதாகவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதையும் சிபிஐ விசாரணையையும் நியாயப்படுத்துவதாகவும் வாதிட்டார். முதலமைச்சரும் உயர் காவல்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கும்போது, மாநில காவல்துறையால் ஒரு நியாயமான விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.

மம்தா பானர்ஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், சிங்வி போன்றோர், அமலாக்கத்துறையின் மனுக்களின் விசாரணைக்கு உகந்த தன்மை இல்லை என்ற அடிப்படையில் அவற்றை கடுமையாக எதிர்த்தனர். இதேபோன்ற கோரிக்கைகளுடன் ஏற்கனவே கல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில், அமர்வுத் தேர்வு (forum shopping) செய்வதில் அமலாக்கத்துறை ஈடுபடுவதாக அவர்கள் வாதிட்டனர்.
“நிலக்கரி ஊழல் வழக்கில் 2024 பிப்ரவரியில் விசாரணை நடந்தது. அதன் பிறகு அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தேர்தல்களை ஐ-பேக் நிறுவனம்தான் கவனித்துக்கொள்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இது தொடர்பாக ஐ-பேக் நிறுவனத்துக்கும் திரிணமூல் காங்கிரசுக்கும் இடையே முறையான ஒப்பந்தம் உள்ளது.
தேர்தல் தரவுகள் ரகசியமானவை. அவை அனைத்தும் அங்குதான் வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் குறித்த பல தகவல்கள் அங்கு இருக்கும். அந்த தகவல்கள் அவர்களிடம் கிடைத்துவிட்டால், நாங்கள் எப்படி தேர்தலில் போட்டியிடுவது? கட்சியின் தலைவருக்கு (மம்தா பானர்ஜிக்கு) அதை பாதுகாக்கும் உரிமை உண்டு. அதனால்தான் அவர் அங்கு சென்றார்” என வாதிட்டார்.
அபிசேக் சிங்வி வாதிடும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் கட்சியின் தேர்தல் தொடர்பான தரவுகளைக் கையாளும் ஒரு வளாகத்திற்குள் நுழைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்ட பின்னரே, முதலமைச்சர் தனது அதிகாரப்பூர்வ பதவியில் அல்லாமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவே அந்த இடத்திற்குச் சென்றார் என்று சிபல் வாதிட்டார்.
அமலாக்கத்துறையின் பஞ்சநாமா அறிக்கையே அதன் குற்றச்சாட்டுகளுக்கு முரணாக இருப்பதாகவும், எந்தப் பறிமுதலும் நடைபெறவில்லை என்பதைக் காட்டுவதாகவும் அவர் வலியுறுத்தினார். “ஒன்று பஞ்சநாமா அறிக்கை பொய் சொல்கிறது, அல்லது அமலாக்கத்துறையின் மனு பொய் சொல்கிறது,” என்று சிங்வி வாதிட்டார்.
மேலும், தேர்தல் காலத்தில் முக்கியமான கட்சித் தரவுகளை அணுகும் நோக்கில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டி, மாநில அரசும் இந்தச் சோதனையின் நேரத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. ஏதேனும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அமலாக்கத்துறை நேரடியாக சரத்து 32-ஐப் பயன்படுத்தாமல், சரத்து 226-இன் கீழ் உயர் நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “உங்கள் தேர்தல் தரவுகளை பறிமுதல் செய்யும் நோக்கம் அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்கள் அதை எடுத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் எடுக்கவில்லை. உணர்ச்சிகள் மீண்டும் மீண்டும் கட்டுப்பாட்டை மீற அனுமதிக்க முடியாது” என தெரிவித்தனர்.
இருப்பினும், அரசியலமைப்பு நீதிமன்றங்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகளைப் பாதிக்கும் வகையில் மீண்டும் மீண்டும் ஏற்படும் இடையூறுகள் குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்ட முந்தைய சம்பவங்களைக் குறிப்பிட்ட நீதிபதி மிஸ்ரா, இதுபோன்ற சூழ்நிலைகள் மீண்டும் ஏற்பட அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
தனது உத்தரவில், அமலாக்கத்துறை ₹2,700 கோடிக்கும் அதிகமான ஊழலை விசாரித்து வருவதாகவும், குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம் ஐ-பிஏசி-யின் செயல்பாட்டுக் கட்டமைப்புடன் தொடர்புடையது என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாகவும் அமலாக்கத்துறை சமர்ப்பித்த வாதங்களை உச்ச நீதிமன்றம் பதிவு செய்தது.
முறையான அனுமதி இருந்தபோதிலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் மூத்த மாநில அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாகவும், சோதனையின் போது சேகரிக்கப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டையும் அது குறிப்பிட்டது.
மேலோட்டமான பார்வையில், இந்த மனுக்கள் சட்டத்தின் ஆட்சி மற்றும் மத்திய அமைப்புகள் சுதந்திரமாக செயல்படும் திறன் தொடர்பான தீவிரமான பிரச்சினைகளை எழுப்புவதாக நீதிபதிகள் அமர்வு கருதியது. “இத்தகைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் விடப்பட்டால், அது சட்ட ஒழுங்கற்ற சூழ்நிலைக்கு வழிவகுக்கும்,” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க மேற்கு வங்கஅரசு, மம்தா பானர்ஜி, மாநில காவல்துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டனர்.
அதே நேரத்தில், அரசியல் கட்சிகளின் நியாயமான தேர்தல் பணிகளில் தலையிட மத்திய அமைப்புகளுக்கு அதிகாரம் இல்லை என்றும் அது தெளிவுபடுத்தியது. இந்த வழக்கு பிப்ரவரி 3 அன்று, பதில்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மேலும் விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
[youtube-feed feed=1]