புதுடெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ராஜீவ் சக்சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ள ‘அப்ரூவர்’ என்ற அந்தஸ்தை ரத்துசெய்ய வேண்டுமெனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக கூறுகிறது மத்திய அமலாக்கத்துறை.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், முக்கியப் பிரமுகர்களுக்கு 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில், சில முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில், முக்கிய சாட்சியான துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் சக்சேனா, 2019, ஜனவரி 31ம் தேதி நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். அவர், அப்ரூவராக மாறியதாக, அமலாக்கத் துறை, சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ராஜீவ் சக்சேனா, ஊழல் தொடர்பான முழு உண்மைகளை கூறாமல், குற்றம்சாட்டப்பட்டோரை காப்பாற்றும் நோக்கில், போலி ஆவணங்களை தயார் செய்ததாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. அதனால், ராஜீவ் சக்சேனாவுக்கு வழங்கிய அப்ரூவர் அந்தஸ்தை நீக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நேற்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஹரிசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராஜீவ் சக்சேனாவின் அப்ரூவர் அந்தஸ்தை நீக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், ஆகையால் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைக்குமாறும், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோஹப் உசேன் கேட்டுக் கொண்டார். இதனையேற்று, வழக்கு விசாரணையை அக்டோபர்15ம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி.