பிரியங்கா பொறுப்பேற்ற நாளில் கணவர் வதேராவை துளைத்தெடுத்த அமலாக்கத்துறை…
பிரியங்காவின் கணவர்-ராபர்ட் வதேரா.
ரியல் எஸ்டேட் அதிபர்.லண்டனில் சொத்துக்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட –அவர் நேற்று டெல்லி ஜாம் நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்
காரில் அவரை அழைத்து வந்தவர்- பிரியங்கா. அமலாக்கத்துறை அலுவலகத்தில் கணவரை இறக்கி விட்டு விட்டு ,காங்கிரஸ் அலுவலகம் பறந்தார்.
15 நாட்களுக்கு முன்னர் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த பிரியங்கா அந்த பொறுப்பை ஏற்றுகொண்டார்.
கட்சி தலைவர் ராகுலுக்கு பக்கத்து அறை-பிரியங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தனது அறையில் ,தொண்டர்களை சந்தித்து உரையாடிய பிரியங்கா,பின்னர் செய்தியாளர்களிடமும் உரையாடினார்.
வதேரா மீதான வழக்கு பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
‘’அவர் என் கணவர்.அவர் எனது குடும்பம்.எனது குடும்பத்துக்கு ஆதரவாக நான் இருப்பேன்’’ என்று நிறுத்தியவர்-‘’இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை நாடு அறியும்’’ என்று கூறிவிட்டு அம்மா வீட்டுக்கு சென்றார்.
பிரியங்கா பொறுப்பேற்ற நிமிடங்களில்-அமலாக்க துறை அலுவலகத்தில் நடந்தது என்ன?
மாலை 3.45 மணி வாக்கில் வதேராவிடம் விசாரணை ஆரம்பமானது.5 மணி நேர விசாரணையில் சுமார் 40 கேள்விகளால் வதேரா துளைத்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த விசாரணை காங்கிரசார் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘’அமலாக்கத்துறையில் -இன்று வதேரா..நாளை மோடி..’’என்று கொதித்தார்- காங்கிரஸ் ராஜ்ய சபா எம்.பி.சஞ்சய் சிங்.
— பாப்பாங்குளம் பாரதி