சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. ஆனாலும் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் கடந்த 4-ம் தேதி துவங்கியது. சென்னை, வேலூர், கடலூர் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் முதல் 13 நாட்களும், கடைசி 9 நாட்களும் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்த கத்திரி வெயில் காலம் இன்றுடன் முடிகிறது.
இடையில் கோடைமழை காரணமாக சில நாட்கள் மட்டும் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மற்றபடி வெயில் கொடுமை அதிகமாகவே இருந்தது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த 26-ந் தேதி 106.16 டிகிரி வெயில் பதிவானது.
கத்திரி வெயில் இன்று விடை பெற்றாலும், வெயிலின் தாக்கம் வரும் 3 நாட்கள் கூடுதலாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 5 செ.மீட்டர் மழையும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 3 செ.மீட்டர் மழையும், திருப்புவனத்தில் 2 செ.மீட்டர் மழையும், ஈரோடு மாவட்டத்தில் 1 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.