ஃபிரான்ஸ் புதிய அதிபராக மக்ரோங் பதவியேற்றார். பிரான்ஸின் உலகளாவிய நிலையை மீட்டெடுப்பேன் என்று 39 வயதான பிரான்ஸின் இளம் அதிபர் இம்மானுவெல் மக்ரோங் தெரிவித்தார்.

பதவியேற்புக்கு முன்னதாக பதவியில் விலகும் சோஷலிச அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு மக்ரோங் ஒரு மணி நேரம் கலந்துரையாடினார். பிரான்ஸின் அணுசக்தி ஆயுத தொகுதிகளின் குறியீடுகளை புதிய அதிபரிடம் வழங்கினார். நாட்டை நல்ல நிலைமையில் விட்டுவிட்டு செல்வதாக கூறிய பிரான்சுவா ஒலாந்த், அதிபர் வீட்டில் இருந்து வெளியேறினார்.

நாட்டின் ஆயுதப்படையின் ஒன்றிணைப்பை காட்டும் வகையில் பச்சை நிற ராணுவ திறந்த காரில் பாதுகாப்பாளர்களோடு மக்ரோங் பயணித்தார்.

2 உலகப் போர்களில் உயிர்நீத்த வீரர்களுக்கு ஆர்க் டி திரியோம்ஃபேக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் மக்ரோங். அங்கு அணையாமல் எரியும் விளக்கை அவர் மீண்டும் ஏற்றி வைத்தார்.

நெப்போலியனுக்கு பிறகு மிகவும் இளம் அதிபராக பதவியேற்றுள்ள மக்ரோங் நாட்டின் அரசியல் ஒழுங்குகளை சீர்திருத்தம் செய்வேன் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்துவேன் என்றும் உறுதி அளித்தார்.