டெல்லி: வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என  உச்சநீதி மன்றத்தில் வட்டிக்கு வட்டி தொடர்பான வழக்கில் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, பொதுமக்களின் வாழ்வாதாரமே முடங்கியது. இதனால்,  வங்கி கடனை கட்ட ஆறு மாத தவணையை மத்தியஅரசு வழங்கியது. வாடிக்கையாளர்களுக்கு வட்டிக்கு வட்டி போடப்படாது என்றும் கூறியது. ஆனால, அதற்கான வட்டிக்கு வட்டியை வங்கிகள் செலுத்த வாடிக்கையாளர்களை வலியுறுத்தியது. இதை எதிர்துது தொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசு 2கோடி ரூபாய் வரை வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என்றும்,    இந்த சலுகை தனி நபர்கள் வாங்கிய கடன், வீட்டுக்கடன், சிறுதொழில் நிறுவனங்கள் , நிறுவனங்கள் வாங்கிய கடன், கல்வி கடன், நுகர்வோர் பொருட்கள் கடன், வாகன கடன், கிரிடிட் கார்டு கடன் ஆகியவற்றுக்கும் பொருந்தும் எனவும் கூறியது.
இந்த விவகாரத்தில், மத்தியஅரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் பதிலில் திருப்தி அடையாத உச்சநீதிமன்றம்,  பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் பிரமாண பத்திரம்   தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக ஏற்கனவே அமிலில் உள்ள காமத் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய தொகுக்கப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில்,  வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என்றும், வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பது, கடனைத் திருப்பிச் செலுத்தும் ஒழுங்கை பாதிப்பதோடு, கடன் வழங்கும் முறையை பலவீனப்படுத்தி விடும், வாடிக்கையாளர்கள் மீதான சுமையை அதிகரிக்கச் செய்துவிடும், தள்ளிவைப்புக் காலம் முடிந்த பிறகு கடனை திருப்பிச் செலுத்தும் கடமையில் இருந்து நழுவச் செய்துவிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.