சென்னை:
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ. மற்றும் வட்டி வசூலிக்கப்படாது என்று தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவித்து உள்ளார்.
ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் விளக்கம் அளித்து உள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் மாதாந்திர ஈஎம்ஐ மற்றும் கடன்களை வசூலிப்பதில் இருந்து விலக்கு கோரி வந்தனர்.
அதைத்தொடர்ந்து மத்தியஅரசும், கடன் தொகை மற்றும் ஈஎம்ஐ போன்றவைகள் செலுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும், அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ. மற்றும் வட்டி வசூலிக்கப்படாது என்று தெரிவித்து உள்ளார்.