மும்பை,

எகிப்து நாட்டை சேர்ந்த 36 வயது பெண் எமான். இவருக்கு 11 வயதாகும்போது பக்கவாதத்தாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார்.  25 ஆண்டுகள் படுக்கையிலேயே  கழிந்த நிலையில், அவரது உடல் எடை நாளுக்கு நாள் பெருகி 500 கிலோ எடையுடன் காட்சி அளித்தார்.

அரை டன் அளவுக்கு உடல் எடை இருந்ததால் வெளியில் எங்கும் செல்லமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். மருத்துவ சிகிச்சை மூலம் உடல் பருமனைக் குறைக்க விரும்பிய எமானின் விருப்பத்தை நிறைவேற்ற உலகின் உயர்தர மருத்துவமனைகள்கூட கைவிரித்தன. இந்நிலையில் தற்போது மும்பையைச் சேர்ந்த மருத்துவர் முப்பஷால் என்பவர் எமானின் உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.

எகிப்து பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் முப்பஷால் லக்டவாலா, இந்தியாவுக்கு வரும்போது  500 கிலோவாக இருந்த எமானின் எடை  242 கிலோவாக குறைந்துவிட்டதாக கூறினார்.

மேலும் அவர், ஏமானின் இதயம், சிறுநீரகம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் ஆரோக்கிய நிலையில் இருப்பதாக கூறினார்.  அதேநேரம் அவரது உடலின் வலதுபாகம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயலிழந்து காணப்படுவதாகவும், அதனால் அவருக்கு எப்போதாவது வலிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். விரைவில் சிடி  ஸ்கேன் எடுத்து பிரச்னையை ஆராய்ந்து சரிசெய்யப்படும் என்றும் மருத்துவர் முப்பஷால்  கூறினார்.