காஞ்சிபுரம்:

40ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதரை தரிசிக்க கடந்த 30நாட்களில் மட்டும் 48லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது உலகின் பணக்கார கடவுளான ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டத்தை விட இரு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் முன்பு மூலவராக இருந்த ஆதி அத்தி வரதர் சிலை பல நூறாண்டுகளுக்கு முன்பு அங்குள்ள அனந்த சரஸ் குளத்தில் நீருக்கு அடியில் வைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த சிலை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் வெளியே எடுக்கப்பட்டு, 48 நாட்கள்  பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு தரிசனம் கொடுத்து வருகிறார். இவரின் தரிசனம் 24 நாட்கள் சயன கோலத்திலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த முறை, சிலையின் பாதுகாப்பு கருதி, ஜூலை 1ந்தேதி முதல் கடந்த 30 நாட்கள் சயன கோலத்தில் இருந்த நிலையில், ஜூலை 1ந்தேதி முதல் நின்ற கோலத்தில் தரிசனம் அளித்து வருகிறார். அத்திவரதர் தரிசனம் பெற நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த   1979ம் ஆண்டு  ஜூலை, 2ந்தேதி பக்கதர்களுக்கு தரிசனம் அளித்தபோதே, அத்தி வரதரை  அப்பொழுதே பல லட்சம் மக்கள் தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை யில், தற்போதைய தகவல் தொடர்பு அதிகரித்துள்ள நவீன யுகத்தில், அத்திவரதர் குறித்த செய்தி கள் மின்னன்ல வேகத்தில் பரவி வருவதால், அவரைக் காணவும், அவரின் அருளாசி பெறவும் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

பக்தர்களின் வசதிகளுக்காக மாவட்ட நிர்வாகம், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அத்திவரதரை சுமார் 48 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இது பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே பணக்கார கடவுளாக கருதப்படுபவர் திருப்பதி ஏழுமலையான். அதிக அளவில் வருமானம் ஈட்டுபவரும் அவரே. அவரை தரிசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருவது அனைவருக்கும் தெரியும். அவரை தரிசிக்க குறைந்த பட்சம் சில மணி நேரங்கள் முதல் அதிகப் பட்சமாக 48 மணி நேரம் வரை காத்திருந்த சம்பவங்களும் உண்டு.

இவ்வளவு பிரசித்தி பெற்ற ஏழுமலையானையே விஞ்சிவிட்டார் அத்திவரதர். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால், அவரைக்காணவும், அவரின் ஆசிகள் பெறவும் பொதுமக்களிடையே ஆர்வமும், பக்தியும் அதிகரித்து உள்ளது.

பொதுவாக திருப்பதியில் மாதம் ஒன்றுக்கு (விழாக்காலங்கள் தவிர) சுமார் 25 லட்சம் மக்கள் தரிசனம் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அத்திவரதர் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 48 லட்சம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி ஏழுமலையான விஞ்சிவிட்டார்….