உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், தங்கள் மகள் பாம்பாக மாறியதாக குடும்பத்தினர் பரப்பிய தகவல், இறுதியில் காதலனுடன் ஓடிப்போன கதையாக மாறியுள்ளது.

சிங்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான ரீனா, ஞாயிறு இரவு வீட்டில் இருந்து மாயமானார். திங்கள்கிழமை காலை அவரது படுக்கையில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு தோல், வளையல்கள், மோதிரங்கள், உடைகள் கிடந்ததை பார்த்த குடும்பத்தினர், “எங்கள் மகள் நாகினியாக (பாம்பு) மாறிவிட்டார்” என பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த தகவல் பரவியதும், கிராம மக்கள் பெருமளவில் வீட்டின் முன் கூடி பாம்பு தோலை பார்க்கத் தொடங்கினர். தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ரீனா அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞருடன் காதல் உறவில் இருந்ததும், இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு ஓடியதும் தெரியவந்தது.

சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினர் ரீனாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயித்திருந்ததால், குழப்பம் ஏற்படுத்தவே இந்த ‘நாகினி நாடகத்தை’ அவர் அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

ராகேஷ் வால்மீகியின் மகளான ரீனா ஆறு சகோதரிகளில் இளையவர். கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக வீட்டை விட்டு ஓடும் திட்டத்தை அவர் போட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மெயின்புரி மாவட்டம் கும்ஹேலில் உள்ள சேஷநாக் கோவிலுக்கு சென்ற ரீனா, அங்கிருந்து பாம்பு சிலை ஒன்றை கொண்டு வந்துள்ளார். “கனவில் பாம்புகள் வருவதாக” வீட்டாரிடம் கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டை விட்டு செல்லும்போது அந்த பாம்பு சிலையை மட்டும் எடுத்துச் சென்றுள்ளார்.

தாயின் மொபைல் போனை பயன்படுத்தி காதலனுடன் தொடர்பில் இருந்த ரீனாவின் அழைப்புகளை போலீசார் கண்காணித்ததில், அந்த இளைஞரின் எண்ணும் தெரியவந்தது. தற்போது இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ரீனாவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். “நாகினியாக மாறியதாக கூறுவது வெறும் வதந்தி மட்டுமே,” என துணை காவல் கண்காணிப்பாளர் மனோஜ் கங்க்வார் தெளிவுபடுத்தினார்.

இந்த வழக்கில் காவல்துறையினர் மூன்று தனிப்படையை அமைத்து காதல் ஜோடியை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]