நியூயார்க்: டிவிட்டர் சமூக இணையதளத்தை முழுமையாக கைப்பற்றிய எலன்மஸ்க், அதில் பணியாற்றி வந்த இந்தியரான பராக் அகர்வால்உள்பட 4 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கிய நிலையில், தற்போது, இந்திய வம்சாவழியைச்சேர்ந்தவரும், சென்னையைச்சேர்ந்த தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவரை நியமனம் செய்துள்ளார். இவர் மூலம் டிவிட்டர் சமூக தளத்தில் அதிரடி மாற்றம் செய்ய  எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார்.

கோடிக்கணக்கானோர் உபயோகப்படுத்தி வரும் டிவிட்டர் நிறுவனத்தை, அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க், 3.52 லட்சம் கோடி ரூபாய்க்கு சமீபத்தில் வாங்கினார்.  அதைத்தொடர்ந்து, பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. புளுடிக்-குக்க பணம் வசூலிக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் அவர் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டிவிட்டர் இணையதளத்தின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் கொள்கையில் பல்வேறு மாற்றங்களை செய்ய அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டிவிட்டரின் தொழில்நுட்பங்களில் பல்வேறு மாற்றங்களை செய்யும் வகையில், தன்னுடன் (எலான் மஸ்க்)  இணைந்து பணியாற்ற, சென்னை சேர்ந்த தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவரை  தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன்,  சென்னை  எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரியில் பி.டெக்., ஐ.டி., பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின் அமெரிக்கா சென்றவர், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தில் பணியை துவக்கினார். அந்நிறுவனத்தின், ‘வின்டோஸ் அசூர்’ மென்பொருளை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். ‘ஸ்நாப், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களின் தொழில்நுட்ப உள்ளடக்கத்தை மேம்படுத்திய குழுவுக்கு தலைமை தாங்கி பல்வேறு புதிய உத்திகளை இவர் உருவாக்கி உள்ளார். மேலும் டிவிட்டர் நிறுவனத்திலும் பணியாற்றி உள்ளார். பின்னர், அங்கிருந்து விலகி  ‘ஆன்ட்ரீசன் ஹாரோவிட்ஸ்’ என்ற தொழில்நுட்ப முதலீட்டு நிறுவனத்தில் பங்குதாரராக இவர் இணைந்து உள்ளார். பல்வேறு புதிய தொழில் ஆலோசனைகளுடன் வரும், ‘ஸ்டார்ட் – அப்’ நிறுவனங்களில் இவரது நிறுவனம் முதலீடு செய்து வருகிறது.

இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை செய்வதற்காக, ஸ்ரீராம் கிருஷ்ணனை தன்னுடன் இணைந்து பணியாற்ற எலாக் மஸ்க் நியமித்துள்ளார். ‘எலான் மஸ்குக்கு உதவுவதற்காகவே, சில தொழில்நுட்ப நிபுணர்களுடன் இணைந்து தற்காலிகமாக பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளேன். ‘ஆன்ட்ரீசன் ஹாரோவிட்ஸ்’ நிறுவனத்தில் என் பணி தொடர்கிறது’ என, ஸ்ரீராம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.