மும்பை:

தனியார், அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மகாராஷ்டிரா அரசு நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நபர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யக் கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கட்ட அம்மாநில அரசின் இந்த உத்தரவு இந்த கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘‘அரசின் இந்த முடிவு தங்களது விருப்பப்படி ஊழியர்களை நியமனம் செய்து கொள்ளும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையை பறிக்காது’’ என்று நீதிபதிகள் பூஷன், கோலாபாவல்லா ஆகியோர் தெரிவித்தனர். உரிமையை பாதிக்கும் என்று கருத்து தெரிவித்திருந்த சோலாப்பூர் மாவட்டம் மீரஜ் பகுதியில் உள்ள ஆசாத் கல்வி மையம் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘மாநிலம் முழுவதும் தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்ய ஒரே சீரான நடைமுறை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது’’ என்றனர்.

முன்னதாக ‘‘மாநில அரசின் இந்த முடிவு தனியார், அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமையை பாதிக்கும்’’ என்று சோலாப்பூர் மாவட்டம் மீரஜ் பகுதியில் உள்ள ஆசாத் கல்வி மையம் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அப்போது, ‘‘சிறுபான்மை கல்வி நிறுவன நிர்வாகத்தில் அரசு தலையிட உரிமை இல்லை. ஊழியர்கள் நியமனத்துக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி மற்றும் மாணவர் சேர்க்கைக்கு பாடப்பிரிவுக்கு ஏற்ற தகுதி இருக்கிறதா? என்பதை மட்டுமே பார்க்க அதிகாரம் உள்ளது’’ என்று கீழமை நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை எதிர்த்து அரசு தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த மனுவில் தான் தற்போது நீதிபதிகள் இத்தகைய ஒரு தீர்ப்பை வழங்கி கீழமை நீதிபதிகளின் உத்தரவை நிராகரித்துள்ளனர்.