சென்னை: கோயில் யானைகளுக்கு, அந்தந்த கோவில்களிலேயே இனி புத்துணர்வு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் கோயில் மற்றும் வன பத்திரகாளியம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பல்வேறு கோயில்களில் திருப்பணி களை மேற்கொள்ள அறங்காவலர்களே பிரச்னையாக உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைற்று வருகிறது. மேலும், வருவாய் அதிகம் உள்ள கோயில்களின் நிதியை கொண்டு, அதன் உப கோயில் களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
”திருக்கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் பணியாளர்கள், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை, திருக்கோயில்களில் காலியாக உள்ள காலிப் பணியிடங்கள் ஆகியவை அடுத்த மாதம் இறுதிக்குள் நிரப்பப்படும்.
மேட்டுப்பாளையத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக, ஆண்டுதோறும் நடைபெற்று வந்த யானைகள் நலவாழ்வு முகாம், இனிமேல் நடைபெறாறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு அந்ததந்தக் கோயில்களிலேயே புத்துணர்வு பெறவும், ஆரோக்கியமாக இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக ”மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, கோயில் யானைகளுக்கு முழு உடற்பரிசோதனை நடத்தப்படும். 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை நடத்தப்படும்.
யானைகள் இல்லாத கோயில்களுக்கு, வீட்டில் வளர்த்து வரும் யானைகளை, உரிமையாளர்கள் தானமாக வழங்கினால், இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில், சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால், ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும், போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.