சென்னை:
மின் கட்டணம் எதிர்த்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட தமிழகம் முழுவதும் திமுகவினர் தங்களது வீடுகள் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் 4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் வசூலித்த தமிழக அரசுக்கு எதிராக பொதுமக்கள் கொந்தளித்துள்ள நிலையில், திமுக,  தமிழக அரசின் மின்கட்டண குளறுபடியை எதிர்த்து இன்று போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்,  மின் கட்டணக்கொள்ளை மூலம் ஷாக் கொடுக்கும் அடிமை அரசுக்கு கறுப்பு கொடியேற்றி கண்டன முழக்கமிடும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் நாளை நாம் ஷாக் கொடுப்போம். அவரவர் வீட்டின் முன் கறுப்பு கொடியேற்றி கண்டன முழக்கமிடுவோம். தனிமனித விலகல், முகக் கவசம் அவசியம் என வலியுறுத்தியிருந்தார்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் திமுகவின்ர்  மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் போராட்டத்தை  தொடங்கி உள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கறுப்புக்கொடியுடன் மு.க.ஸ்டாலின் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.  சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனி இல்லத்தின் முன்பு திமுக எம்.பி. கனிமொழி போராட்டம் நடத்தினார்.
இதனையடுத்து கைகளில் கறுப்புக் கொடியுடன் தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.