சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் கவர்னர் தமிழிசை, டிடிவி தினகரன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மாதாந்திர மின் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

“சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்” என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்! மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்வு | தமிழ்நாட்டில், வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் 0 முதல் 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ரூ.4.60ல் இருந்து ரூ.4.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 401 முதல் 500 யூனிட்  பயன்பாட்டுக்கான கட்டணம் ₹6.15ல் இருந்து ₹6.45ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 501 முதல் 600 யூனிட்  பயன்பாட்டுக்கான கட்டணம் ₹8.15ல் இருந்து ₹8.55ஆகவும், 601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹9.20ல் இருந்து ₹9.65ஆகவும், 801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹10.20ல் இருந்து ₹10.70ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ₹11.80 வசூலிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு  உள்ளது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது-

இந்த கட்டண உயர்வுக்கு  எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து ள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறி‘க்கையில்,  சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன். சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள். தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது பொது மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், மின் கட்டண உயர்வுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு என் கடும் கண்டனம் ! பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக முதல்வர்.

மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு? “சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்” என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்!

உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்! மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது, மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, கட்டண உயர்வைப் பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ள திமுக அரசு, தற்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மீண்டும் ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

திமுக அரசு, கடந்த 2023 – 2024 ஒரு நிதி ஆண்டில் மட்டுமே, ரூ.65,000 கோடிக்கு, மின்சாரம் வாங்கியிருக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மின் உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல், இந்த மின்சாரம் வாங்கிய செலவை, பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ளது. நாடு முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தியைப் பெருக்கப் பல மாநிலங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கையில், மாதம் சுமார் ரூ.5,400 கோடி நிதியை, மின்சாரம் வாங்கச் செலவு செய்திருக்கிறது திமுக. மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான் வழிவகுக்கும். இந்த அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத, முட்டாள்தனமான மாடலாக இருக்கிறது திமுகவின் திராவிட மாடல் அரசு.

எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஷாக் அடிக்கும் மின் கட்டணம் என்றெல்லாம் பேசி காணொளி வெளியிட்ட முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், தற்போது பொதுமக்களுக்குத் தொடர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். ஆட்சிக்கு வந்தால், மாதாமாதம் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்து விட்டு, மூன்று ஆண்டுகள் கடந்தும், அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறார். மாதாமாதம் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை இல்லாமல், பொதுமக்கள் ஏற்கனவே 50% அதிகமாக மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, மாதாமாதம் மின் கட்டணத்தைக் கணக்கெடுப்போம் என்று சொல்லி, தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தையே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், திமுகவின் நிர்வாகத் தோல்விக்காக, பொதுமக்கள் மீது கட்டண உயர்வைச் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?

தங்கள் நிர்வாகத் திறனின்மைக்கு, பொதுமக்களைப் பலிகடாவாக்கும் திமுக, உடனடியாக இந்த மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தி உள்ளிட்ட மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மாதாந்திர மின் கட்டண நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்  வெளியிட்டுள்ள  கண்டன அறிக்கையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, கடந்த 2022 ஆம் ஆண்டு 30 சதவிகிதமும், 2023 ஆம் ஆண்டு 2.18 சதவிகிதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது நடப்பாண்டில் மீண்டும் 4.83 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போதே மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்திகளை மறுத்த திமுக அரசு, தேர்தலுக்கு பின்பு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 221-வதாக இடம்பெற்றிருக்கும் மாதம் தோறும் மின் கணக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு,

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. மின்சார நிலைக்கட்டணம் மற்றும் உச்ச நேர மின் கட்டண உயர்வால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தால் மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வை இருளில் மூழ்கச் செய்ததாக பழனிசாமி அரசாங்கத்தை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின், முதலமைச்சரான பின் அதே தவறை வருடந்தோறும் இழைத்து வருவது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, மின் நுகர்வோர்களுக்கு கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தும் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  வெளியிட்டுள்ள கண்டனம் அறிக்கையில்,  “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கு பரிசு – தமிழக மக்களின் முதுகில் குத்தி விட்டது திமுக அரசு. தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 4.83% அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.6000 கோடிக்கும் கூடுதலான வருவாய் கிடைக்கும். தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தால் எடுக்கப்பட்டது என்று கூறி தமிழக அரசு தப்பித்து விட முடியாது.

ஒழுங்குமுறை ஆணையம் என்பது பொம்மை அமைப்பு. தமிழ்நாடு அரசின் கண்ணசைவுக்கு ஏற்ற வகையில் செயல்படும் அமைப்பு. ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வை விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15-ஆம் நாள் அறிவித்திருப்பதிலிருந்தே இதை உணரலாம். தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது. மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள் ஆகியவற்றை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, மின்சார வாரியத்தில் ஊழல் அதிகரிக்கவே வகை செய்யும்.

ஜூலை 1-ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதை சுட்டிக்காட்டி அதை கைவிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு. ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய கட்டண உயர்வு ஏழை மக்களையும், தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்” தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்  வெளியிட்டுள்ள பதிவில், தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு தரும் பரிசு மின் கட்டண உயர்வா? அடுக்குமாடி குடியிருப்பு முதல் ஏழை எளிய மக்கள் வரை வாக்களித்தவர்களுக்கும், வாக்கு அளிக்காதவர்களுக்கும் பரிசா இந்த மின் கட்டண உயர்வு… சொன்னதை செய்யாமல்…. சொல்லாத மின் கட்டண உயர்வை வாக்களித்த மக்களுக்கு பரிசளித்ததுதான் திராவிட மாடல்…. விடியல் என்று கூறிவிட்டு மக்களை இருட்டில் தள்ளுவதுதான் விடியா திராவிட மாடல்… ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்… என கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  கூறும்போது, மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும் அவர், ” 24 மணி நேரம் மின்சாரம் கொடுக்க முடியாத நிலையில், மின்கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இப்போது மின்சார கட்டணத்தை உயர்த்திய அரசு அடுத்து பேருந்து கட்டணத்தை உயர்த்தும்” என்றார். இதேபோல், மின்கட்டணத்தை அரசு உயர்த்தியது கண்டனத்திற்குரியது என பாமக வழங்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். இதுகுறத்து மேலும் அவுர், ” விக்கிரவாண்டி தேர்தலுக்கு பிறகு மின் கட்டணத்தை அரசு உயர்த்தும் என முன்பே நாங்கள் கூறி வந்தோம். இந்த மின் கட்டண உயர்வு தமிழக மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்” என்றார். தொடர்ந்து, மின்கட்டண உயர்வு என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “மின் கட்டண உயர்வால் திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை உணர முடிகிறது” என்றார்.

பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”தமிழ்நாட்டில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 4.83 சதவீதம் திமுக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் மின் வாரியத்திற்கு ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. மக்கள் அளித்த இந்த வெற்றிக்கு, திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த 6,000 கோடி ரூபாய் மின் கட்டண உயர்வு.

தமிழகத்தில் ஏற்கனவே அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மின் கட்டணம் அதிகரித்ததால் அரிசி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்கனவே கூறி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் மின் கட்டணம் உயர்ந்துள்ளதால் அரிசி விலை மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசு வரியை, திமுக அரசு குறைக்காததால், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக உள்ளது. இப்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து, சாதாரண ஏழை, நடுத்தர மக்களுக்கு சுமை அதிகரிக்கும். மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திமுக அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாக நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

இரண்டாவது முறையாக தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தியது திமுக அரசு… பொதுமக்கள் அதிர்ச்சி… முழு விவரம்…

மின் கட்டண உயர்வுக்கு மத்தியஅரசே காரணம்! தமிழக அரசு குற்றச்சாட்டு…