சென்னை: தமிழ்நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இன்று முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால், வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என கூறிய தமிழ்நாடு அரசு, வீடுகளுக்கான மின்கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்கும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து மக்களை கவர்ந்து வருகிறது. அதன்படி, ஏற்கனவே பல முறை மின் கட்டணங்கள் மற்றும் வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் வரி என அனைத்து வரிகளையும் உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. ஆனால், இந்த முறை மின் கட்டண உயர்வு வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே என்று தெரிவித்துள்ள அரசு, வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்தும் வகையில் கடந்த 2022ம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2022 செப்டம்பர், 10ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் அந்த நிதியாண்டு முதல் 2026 -2027 வரை, ஆண்டுதோறும் ஜூலை, 1ம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. மின்கட்டண உயர்வு 6 சதவீதத்தை விட அதிகரிக்க கூடாது அல்லது ஏப்ரல் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஆகிய இரண்டில் எது குறைவோ அப்படி உயர்த்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த 2023ல் 2.18 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. 2024ல் 4.18 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியானது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் மின்கட்டணம் மாற்றம் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் இன்று முதல் 3.16 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்று செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2025 – 26 ஆண்டிற்கு ஜூலை 1 முதல் வரக்கூடிய மின்கட்டண மாற்றங்களில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி, 2.42 கோடி வீட்டு நுகர்வோர்களுக்கு ஏற்படக்கூடிய மின்கட்டண மாற்றங்களை அரசே ஏற்று கொண்டு அதற்கான மானியத்தொகையை தமிழக மின்சார வாரியத்துக்கு வழங்கும்.
மேலும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். விவசாயம், விசைத்தறி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலை ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

புதிய மின்கட்டண சலுகைகள்:
1. இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டு ஒன்றுக்கு ரூ.51.41 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள சுமார் 34 லட்சம் சிறுவணிக மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
2. 50 கிலோவாட் வரை ஒப்பந்த பளு கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால் ஆண்டொன்றுக்கு ரூ.76.35 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள 2.81 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
3. குடிசை மற்றும் குறு தொழில்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.9.56 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள 2.70 லட்சம் குடிசை மற்றும் குறு தொழில் மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
4. விசைத்தறி நுகர்வோர்களுக்கு ஆயிரம் யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மேலும் 1001 யூனிட்களுக்கு மேல் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.7.64 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது.
இதனால், தமிழகத்தில் உள்ள 1.65 லட்சம் விசைத்தறி நுகர்வோர்களும் பயனடைவார்கள். 2025- 26 ம் ஆண்டின் மின்கட்டண உயர்வின்படி தமிழகத்தில் சுமார் 2.83 கோடி மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லாமல் பயனடைவார்கள்.
இதனால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.519.84 கோடி கூடுதல் செலவாகும். இந்த மானியத்தொகையை மின்சார வாரியத்துக்கு, தமிழக அரசு வழங்கும். பெரிய தொழில், தொழில் வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழக ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்தபடி 3.16 சதவீதம் மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும்”
இவ்வாறு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.