சென்னை:
மின் கட்டண குளறுபடி குறித்து, தமிழகஅரசுக்க திமுக எம்எல்ஏ துரைமுருகன் சரமாரியாக கேள்வி விடுத்துள்ளார்.
“கொரோனா பேரிடர் காலத்திற்கும், சாதாரண காலகட்டத்திற்கும்” வேறுபாடு தெரியாமல் அரசு நடக்கிறது, ஊரடங்கு கால மின்கட்டணம் சுமைதாங்கிகளாக மாறியிருக்கும் மக்களுக்கு, எளிய தவணையில் மின்கட்டணத்தை செலுத்த அனுமதி கொடுங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டால் அதை அரசு செய்யத் தயங்குவது ஏன்? என்று, கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது….
“தமிழகத்தில் 1.5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ரீடிங் எடுக்கும்போது, ஒரு சில நூறு பேருக்கு நோய்த்தொற்று இருந்த நேரத்தில் கூட ரீடிங் எடுக்காமல் இருந்தது அ.தி.மு.க. அரசுதான். இப்படி அனைத்து தவறுகளையும் அரசே செய்து விட்டு, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. நடத்தவிருக்கும் மின் கட்டணத்திற்கு எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தைக் கொச்சைப்படுத்தும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா பேரிடர் சூழலில் மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு கொரோனா கால மின்கட்டணச் சலுகைகளை வழங்கியுள்ளன. எளிய தவணையில் மின்கட்டணத்தை செலுத்த அனுமதித்துள்ளன. எங்கள் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மிகத் தெளிவாக, ‘மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா கால மின்கட்டணச் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுங்கள்’, என்றுதான் கேட்கிறார். இதில் என்ன குற்றம்?, எங்கிருந்து அரசியல் வருகிறது?
‘வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு 100 யூனிட்டிற்கு ஏற்கனவே கட்டணம் வசூலிப்பதில்லை’, என்கிறார் அமைச்சர். இன்றைக்கு அப்பாவி மக்களை மிரட்டும் இவ்வளவு பெரிய மின்கட்டணத்தை கொண்டு வந்தது யார்? 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் 52 சதவீத மின்கட்டணத்தை உயர்த்தியதே அ.தி.மு.க. ஆட்சிதான். மின் வாரியத்தை நிதி நெருக்கடியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, இன்னொரு முறை மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று இப்போது திட்டமிட்டுக் கொண்டிருப்பதும் அ.தி.மு.க. ஆட்சிதானே…
அண்டை மாநிலங்களில் அளிக்கப்படும் கொரோனா கால மின்கட்டணச் சலுகைகளை சுட்டிக்காட்டினால், ‘அங்குள்ள மின்கட்டணம் தமிழகத்திற்கும் வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் விரும்புகிறாரா? என்று கேள்வி கேட்கிறார் அமைச்சர் தங்கமணி. அந்த மாநில அரசுகள் வழங்கியிருப்பது கொரோனா கால மின்கட்டண சலுகைகள். அதைக் கூட ஒப்புக்கொள்ள மறுத்து திசை திருப்பும் பாணியில் அறிக்கை விடுவது அபத்தமானது.
‘முந்தைய மாதம் செலுத்திய மின்கட்டணத்திற்கான பணத்தை கழிக்கும் நீங்கள், ஏன் அந்த தொகைக்குரிய யூனிட்டைக் கழிக்கவில்லை?’, என்பதுதான் மு.க.ஸ்டாலினின் கேள்வி. அதற்கு, தமிழ்நாடு மின்சாரச் சட்டத்தை அமைச்சர் மேற்கோள் காட்டுகிறார். அந்தச் சட்டத்திலேயே மின் உபயோகிப்பாளர்களுக்கு நியாயமான கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று உள்ளதை அமைச்சர் மறந்து விட்டாரா?
ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நேரத்தில் மக்களிடமிருந்து நியாயமான மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும். ‘மின்கட்டண சுமையை குறையுங்கள்’, என்று அ.தி.மு.க. அரசிடம் கோருவது மக்கள் நலன் சார்ந்த அரசியல். ஆகவே, எங்கள் கட்சி தலைவர் கோரிக்கை விட்டிருப்பது போல், மின்கட்டணத்தைக் குறைத்து, எளிய தவணையில் செலுத்த அனுமதிக்க வேண்டும். ஊரடங்கு கால மின்கட்டணச் சலுகைகளை அறிவியுங்கள்.
தி.மு.க.வின் போராட்டத்திற்குப் பின்னால் உள்ள அப்பாவி மக்களின் மின்கட்டண உயர்வு என்ற பெருந்துயரத்தைப் போக்க முன்வாருங்கள் என அமைச்சர் தங்கமணி மற்றும் முதல்அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.