சென்னை: எந்த ஆட்சியில் மின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டு உள்ளது என்பதை, அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியுடன் ஒப்பிட்டு சட்டப்பேரவை யில் விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், எரிசக்தி, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றன. அப்போது, பேசிய அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி, அதிமுக ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் முந்தைய மாத கட்டணத்தை செலுத்தலாம் அல்லது மெபைலில் புகைப்படம் எடுத்து அனுப்பி மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவித்தோம். ஆனால், திமுக ஆட்சியில் கடந்தாண்டு அதே மாத கட்டணத்தை செலுத்த சொன்னதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் தெரிவித்து பேசிய தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா காலக்கட்டம் என்பதால், திமுக ஆட்சியில் மின் கட்டணங்களை மக்கள் செலுத்த மூன்று வாய்ப்புகள் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் கட்டணம், கடந்தாண்டு கட்டணம் அல்லது மொபைலில் புகைப்படம் எடுத்து அனுப்புவது என மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. இந்த வாயப்புகளை பயன்படுத்தி மொத்தம் 14.69 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்தி பயனடைந்து உள்ளனர்.
இந்த காலக்கட்டமான 2020 ஜுலை மாதம் மொத்தம் மின் நுகர்வு 3023 மில்லியன் யூனிட். இதற்கு வசூலிக்கப்பட்ட தொகை – 789 கோடி. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதே காலக்கட்டமான 2021 ஜுலை மாதம் மொத்தம் மின் நுகர்வு 4494 மில்லியன் யூனிட். இது கடந்தாண்டை விட 1471 மில்லியன் யூனிட் அதிகம். அதாவது 48% பயன்பாடு உயர்ந்திருந்தாலும், வசூலிக்கப்பட்ட தொகை 869 கோடி மட்டுமே ஆகும்.
கடந்தாண்டை விட 48% பயன்பாடு அதிகரித்திருந்த போதும், 10 சதவிதகம், அதாவது 80 கோடி தான் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
அதுமட்டுமின்றி, கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் மின் பயன்பாடு – 3025 மில்லியன் யூனிட். இதற்கு வசூலிக்கப்பட்ட தொகை – 751 கோடி ஆகும். 2021 ஆகஸ்ட் மாதம் மின் பயன்பாடு – 4012 மில்லியன் யூனிட். இதற்கு வசூலிக்கப்பட்ட தொகை – 789 கோடி ஆகும்.
2020 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2021 ஆகஸ்ட் மாதத்தில் 987 மில்லியன் யூனிட், அதாவது 32 சதவிகித அதிக பயன்பாடு இருந்தாலும், 22 கோடி மட்டும் தான் கூடுதல் கட்டணம், அதாவது 3 சதவிகிதம் தான் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 419 கோடி கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பதும் முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.