மபுசா
கோவா மாநிலம் மபுசா காவல் நிலையம் மின் கட்டண பாக்கி ரூ.19 லட்சம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கோவா மாநிலம் வடக்குப் பகுதியில் உள்ள மபுசா காவல் நிலையம் வெகு நாட்களாக மின் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் பல முறை நினைவூட்டியும் எவ்வித பயனும் இல்லாமல் இருந்தது. கட்டண நிலுவைத் தொகை ரூ.19 லட்சத்தைத் தாண்டி உள்ளது.
இதையொட்டி அந்த காவல் நிலையத்தின் மின் இணைப்பை அம்மாநில மின் வாரிய உதவிப் பொறியாளர் ஷிரூர் துண்டித்துள்ளார். இது குறித்து அவர், ”பல மாதங்களாக மபுசா காவல் நிலையம் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகை செலுத்தப்படாமல் உள்ளது. பல முறை நினைவூட்டியும் செலத்தாததல் மின் இணைப்பைத் துண்டித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் கோவா மாநிலத்தில் கடும் பரபரப்பை உண்டாக்கியது. பல அரசியல் தலைவர்கள் காவல்துறை மின் கட்டண பாக்கி வைத்ததற்குக் கண்டனம் தெரிவித்தனர். அதை அடுத்து கோவா மாநில பாஜக அரசின் உள்துறை அமைச்சக அதிகாரியின் பரிந்துரையின் பேரில் மீண்டும் மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.