அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வரும் அனாமதேய நன்கொடை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கியது.

பிப்ரவரி 15ம் தேதி வழங்கக்கப்பட்ட இந்த தீர்ப்பில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடையை திரும்ப வழங்க வேண்டும் என்றும் யாரிடம் இருந்து என்ன தொகை வாங்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளிப்படவேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இருந்த போதும் இந்த சட்டத்தில் சில திருத்தங்களை செய்து மீண்டும் நடைமுறைப்படுத்த முடியுமா ? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சட்ட வல்லுநர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளதை அடுத்து இந்த சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக மறுஆய்வு மனுவுக்கோ அல்லது குறைதீர்வு மனுவுக்கோ வாய்ப்பில்லை என்று கூறியுள்ள அவர்கள் ஐந்து நீதிபதிகளும் இதில் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளதால் மறுஆய்வு செய்வதற்கான முகாந்திரம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.