டில்லி:

திர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய எக்சிட் போல் கருத்துக்கணிப்பில் பாஜக அதிக இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று டில்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்பட 21 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டன.

கூட்டத்தில் எக்சிட் போல், மற்றும் நாளை மறுதினம் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று பிற்பகல் 21 எதிர்க்கட்சித் தலைவர்களும் தலைமைத் தேர்தல் ஆணையம் சென்று, தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

மனுவில்,  வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுகளுக்கும் முரண்பாடு இருப்பது தெரிய வந்தால்கூட, அந்த தொகுதியில் முழுமையாக ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாப்நபி ஆசாத், தங்களது கோரிக்கை  பெரும்பாலான மக்களின் ஆதரவை பெற்ற 22 கட்சிகளின் கோரிக்கை என்றும், தங்களது கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிப்பதாக தெரிவித்து இருப்பதாகவும் கூறினார்.