a
ஆளுங்கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் இருந்தால், பிரச்னையில்லை. ஒருவேளை, அவர்கள் அதிக இடங்களைப்பெற்று, ஆனால் பெரும்பான்மை பெறாவிட்டால்?
அப்போதும் அவர்கள் பிற கட்சிகளின் ஆதரவைப்பெற்று ஆட்சி நடத்தலாம். இதிலும் உள்ளிருந்து ஆதரவு, வெளியிலிருந்து ஆதரவு என இரு வகைகள் உண்டு. அதாவது, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் ஆட்சியில் பங்கேற்கலாம், அல்லது, பங்கேற்காமல் வெளியிலேயே இருந்துவிடலாம்.
இது அரசியலுக்குமட்டுமல்ல, எங்கும் பொருந்தும். ‘இன்றைக்குத் திரைப்படத்துக்குப்போகலாமா?’ என்று தந்தை கேட்கிறார். மகன் அதற்கு ஆதரவளிக்கிறான்.
‘ஆதரவு தரும் மகளார்’ என்று பெரியபுராணத்தில் வருகிறது. இங்கே ஆதரவு என்பதன் பொருள், அன்பு/சிறப்பு/மேம்பாடு/பெருமை.
ஆக, ஒரு கட்சி இன்னொரு கட்சிக்கு ஆதரவு தருகிறது என்றால், அதனைச் சிறப்பாக்குகிறது, மேம்படுத்துகிறது என்கிற பொருளில் எடுத்துக்கொள்ளலாம். அந்தச் சிறப்பைக்கொண்டு, சிறுபான்மையாக இருந்த கட்சியால் ஆட்சியமைக்க இயலுகிறது.
‘ஆதரவு’ என்பதன் வேர்ச்சொல், ‘ஆதரி’, இவர் அவரை ஆதரித்தார் என்று சொல்கிறோமல்லவா.
இந்த ‘ஆதரி’க்கும் அன்பு என்பதுதான் பொருள், ஒருவர்மீது அன்பு இருந்தால்தான் அவரை (உண்மையாக) ஆதரிக்கமுடியும்.
கம்பராமாயணத்தில் சீதையை வர்ணிக்கும் ஒரு வரி:
‘ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து,
அவயமம் அமைக்கும் தன்மை
யாது? என்று திகைக்கும்அல்லால்
மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதை.’
மன்மதன் சீதையைப் பார்த்தானாம், அவளைப்போல் ஓர் ஓவியம் வரையலாம் என்று விரும்பினானாம், அமுதத்திலே தூரிகையைத் தோய்த்து வரைய முயன்றானாம். அதன்பிறகும், ‘ம்ஹூம், என்னால் இப்படியொரு பெண்ணை வரைய இயலாது’ என்று திகைத்து நின்றுவிட்டானாம், அப்படியோர் அழகு!
இங்கே ‘ஆதரித்து’ என்ற சொல்லின்பொருள், விருப்பம்/விரும்பி. இதுவும் அன்பின் இன்னொரு வடிவம்தானே!
இதே பொருளில் மாணிக்கவாசகரும் சிவனை அழைக்கிறார்: ‘ஆதியே, அடியேன் ஆதரித்து அழைத்தால், ‘அதெந்துவே’ என்று அருளாயே!’
(தொடரும்)