என்.சொக்கன்
Tamil
ஆட்சிக்கு வந்துள்ள கட்சியை ‘ஆளுங்கட்சி’ என்கிறோம், அடுத்த தேர்தல் வரும்வரை, அல்லது, அடுத்த ஆட்சி அமையும்வரை அவர்களைக் குறிப்பிட அந்தப் பெயரே பயன்படுத்தப்படுகிறது.
ஆளும்கட்சிதான் ஆளுங்கட்சி. ஒரு சொல் ‘ம்’ என்ற எழுத்தில் முடிந்து, அடுத்த சொல் க, ச, த என்ற வல்லின எழுத்துகளில் தொடங்கினால், அந்த ‘ம்’ மாறிவிடும், அதற்குப்பதிலாக, அந்த வல்லின எழுத்தின் இனஎழுத்து தோன்றும்.
அதென்ன இனஎழுத்து?
மெய்யெழுத்துகளை வாசித்த வரிசை நினைவிருக்கிறதா? க்,ங்,ச்,ஞ்… அதில் ஒவ்வொரு வல்லின எழுத்துக்கும் அடுத்தபடியாக வந்த மெல்லின எழுத்துதான் அதன் இனஎழுத்து.
அதாவது, க்:ங் இனஎழுத்துகள், அதேபோல், ச்:ஞ், ட்:ண், த்:ந், ப்:ம், ற்:ன் இனஎழுத்துகள்.
ஆக, ஆளும்+கட்சி என வரும்போது, அந்த ‘ம்’ மாறிவிடும், அதற்குப்பதிலாக, ‘க்’ என்பதன் இனஎழுத்தான ‘ங்’ தோன்றும்: ஆளுங்கட்சி.
இதேபோல், ஆளும்+தலைவர் என்றால், ஆளுந்தலைவர், ஆளும்+சக்தி என்றால், ஆளுஞ்சக்தி.
ஆளுதல் என்ற சொல்லை நாம் பரவலாகப் பலவிதங்களில் பயன்படுத்துகிறோம். ஆட்சி, ஆளுதல், ஆளுநர், அவ்வளவு ஏன், Personality என்பதற்கு இணையாக ஆளுமை என்ற சொல்லும் வழக்கத்தில் உள்ளது, அதாவது, தன்னை, சுற்றியிருப்பவற்றை ஆளும்திறமை.
எழுத்தாளர் என்ற சொல், எழுத்தை ஆளுபவர் என்ற பொருளில் வருகிறது, அவர் சொற்களை நன்கு திறமையாகப் பயன்படுத்தினால், ‘சொல்லை நன்கு ஆளுகிறார்’ என்கிறோம்.
இதேபோல், வாக்காளர் என்பவர் தனக்கிருக்கும் வாக்கை ஆளுபவர்/ அந்த வாக்கை யாருக்கும் தரும் உரிமை அவருக்கு உண்டு என்று ஏற்கெனவே பார்த்தோம், அவர் அப்படி ஆண்டதால்தான், அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஒரு வேட்பாளர் ஆட்சியாளர் ஆகிறார்!
(தொடரும்)