என். சொக்கன்
தேர்தலில் அதிகபட்ச வாக்கு எண்ணிக்கையைப் பெறுகிறவர்தான் வெல்வார், அப்படி அதிகப்பேர் வெல்லும் கட்சிதான் ஆட்சியமைக்கும், இது எல்லாருக்கும் தெரிந்தது.
ஆட்சியில் இரண்டு வகை: பெரும்பான்மை ஆட்சி, சிறுபான்மை ஆட்சி.
நூறு உறுப்பினர்கள் இருக்குமிடத்தில் ஒரு கட்சியோ கூட்டணியோ 51 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களைப்பெற்றால், அது பெரும்பான்மை ஆட்சி.
ஒரு கட்சி அதற்குக் குறைவான இடங்களைப்பெற்றாலும் பரவாயில்லை, அடுத்த நிலையில் உள்ள கட்சியைவிட அதிக இடங்களைப் பெற்றிருந்தால் அவர்கள் ஆட்சி அமைக்கலாம், ஆனால், அது பெரும்பான்மை ஆட்சி ஆகாது. காரணம், அதே மன்றத்தில் இருக்கும் மற்றவர்களின் எண்ணிக்கையைக் கூட்டிப்பார்த்தால், அந்த எண்ணிக்கை ஆட்சியமைத்துள்ள கட்சிக்குச் சமமாகவோ அவர்களைவிட அதிகமாகவோ இருக்கும்.
‘பான்மை’ என்ற சொல் பால் என்ற சொல்லிலிருந்து வருகிறது, ஒரு பொருளின் இயல்பை/தன்மையைக் குறிக்கிறது.
ஒருவன் நல்லவனாக இருந்து ஏதேனும் தீய செயல் செய்தால், ‘பால் மாறிட்டான்’ என்று சொல்கிறோமல்லவா? பான்மை கெட்டுவிட்டான், இயல்பு மாறிவிட்டான் என்று பொருள்.
ஆக, பெரும்பான்மை என்றால், பெரிதான தன்மை, சிறுபான்மை என்றால் சிறிதான தன்மை.
இச்சொல்லைச் சமூகத்தளத்திலும் காண்கிறோம். ‘சிறுபான்மையினத்தவர்’ என்றால், எண்ணிக்கையில் குறைவாக உள்ளவர்கள் என்று பொருள்.
இதேபோல், ‘மனப்பான்மை’ என்ற சொல்லும் உண்டு, மனத்தின் தன்மையைக் குறிப்பது.
சில நேரங்களில் ஓர் அரசியல் கட்சி ‘அறுதிப்பெரும்பான்மை பெற்றது’ என்கிறார்களே, அதென்ன?
ஒரு விஷயத்தைப்பற்றி வலியுறுத்திப்பேசுகிற ஒருவர், ‘அறுதியிட்டுக்கூறுகிறேன்’ என்று சொல்வதைப் பார்க்கிறோம். அந்த அறுதிதான் இது.
‘அறுதி’ என்றால் முடிவான உறுதி என்று பொருள், அதாவது, இதற்குமேல் ஒன்றுமில்லை, மறுத்துப்பேசவே இயலாது!
(தொடரும்)