என். சொக்கன்
 
1

தேர்தல்பற்றி விவாதிக்கக் கட்சியின் பொதுக்குழு கூடியது, அதன்பிறகு, செயற்குழுவும் கூடும்.
அதென்ன பொதுக்குழு, செயற்குழு?
‘பொது’ என்ற சொல் அனைவருக்குமானது என்ற பொருளில் பயன்படுகிறது. பொதுவுடைமை என்றால், பொது உடைமை, அனைவருக்கும் உரியது. தனியுடைமை என்றால், தனி உடைமை, ஒருவருக்குமட்டும் உரியது.
சிலர் இச்சொற்களைப் பொதுவுடமை, தனியுடமை என்று எழுதுகிறார்கள். அவை பேச்சுவழக்கில் வந்த போலிகள்தாம்.
பொதுமன்றம் என்றால், அனைவரும் செல்லக்கூடிய மன்றம், தனிமன்றம் என்றால், சிலர்மட்டும் செல்லக்கூடியது.
முகலாய அரண்மனைகளில் Diwan-i-Am, Diwan-i-Khas என்ற மண்டபங்களைக் காணலாம். இவற்றை முறையே, பொதுச்சந்திப்புக்கான இடம், தனிச்சந்திப்புக்கான இடம் என்று சொல்லலாம்.
வடமொழியில் ஆம் என்றால் பொது, ‘ஆம்  ஆத்மி கட்சி’ என்றால், பொதுமக்கள் கட்சி.
அதுபோல, Diwan-i-Am என்றால், பொதுமக்கள் அரசரைக் காணக்கூடிய இடம். Diwan-i-Khas என்றால், முக்கியமான பிரமுகர்கள் அரசரைத் தனியே காணக்கூடிய இடம்.
பொதுப்பள்ளிக்கூடம், தனி(யார்) பள்ளிக்கூடம் என்று சொல்கிறோமல்லவா? அதுவும் இதே வகைபாடுதான், பொதுப்பள்ளிக்கூடத்தில் எல்லாரும் சேரலாம், தனியார் பள்ளிக்கூடத்தில் அவர்கள் விருப்பத்துக்கேற்பதான் சேர இயலும்.
ஆனால், அரசியல் கட்சிகளைப்பொறுத்தவரை ‘பொதுக்குழு’ என்பது சற்றே வித்தியாசமாக அமைகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் முக்கியமான கட்சி உறுப்பினர்கள் சிலர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இவர்கள் சேர்ந்து பேசுவதைதான் ‘பொதுக்குழு கூடியது’ என்பார்கள்.
செயற்குழு என்பது, பொதுக்குழுவைவிடச் சிறியதாக இருக்கும், செயல்குழு, அதாவது, செயல்படக்கூடிய அதிகாரம் கொண்டவர்களுக்கானது.