டெல்லி: சட்டசபை தேர்தலில் அமமுக கட்சிக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை, இருபெரும் ஆளுமைகளான கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாமல் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் சந்திக்கின்றன.

திமுக ஒரு கூட்டணியாகவும், அதிமுக ஒரு கூட்டணியாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. மற்ற கட்சிகளின் நிலை என்ன என்பது பற்றி உறுதியான நிலைப்பாடுகள் இல்லை. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி மக்களை சென்று சந்தித்து வருகிறார்.

அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ரஜினியின் கட்சி பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று மதுரையில் தொடங்கி உள்ளார்.

இந் நிலையில் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி உள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.