நெல்லை

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. எனவே அரசியல் கட்சியினர் மும்மரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்ய வேட்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு 10 மணிக்குப் பிறகு தேர்தல் பிரசாரம் செய்தால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, நெல்லை நாடாளுமன்றத் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார்நாகேந்திரன் வள்ளியூர் அருகே உள்ள குன்னங்குளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் இரவு 10 மணிக்குப் பின்னர் அங்குள்ள நபர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

எனவே அவர் தேர்தல் விதிமுறைக்கு முரணானது தேர்தல் பிரசார நேரத்தை தாண்டி பிரசாரம் செய்கிறார் என்று வள்ளியூர் பறக்கும் படை அதிகாரி தினேஷ்குமார் பழுவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

பழுவூர் காவல்துறையினர் இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்தி அனுமதிக்கப்பட்ட நேரத்தை விடக் கூடுதலாகத் தேர்தல் பிரசாரம் செய்ததாக நயினார் நாகேந்திரன் உட்படப் பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.