சேலம்:
ஏற்காடுக்கு காரில் சென்ற நடிகை நமீதாவின் காரை வழிமறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட முயன்றனர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நமீதா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தவிர்க்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தருவதை தடுக்கும் முனைப்பில், தேர்தல் பறக்கும் படையினர் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் புலிக்குத்தி பகுதியில் வந்த சொகுசு காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்வதற்காக நிறுத்தினார்கள். அந்த காரினுள் நடிகை நமீதா, அவரது கணவர் மற்றும் 2 பேர் இருந்தனர். அவர்களுடைய காரை சோதனையிட முயன்ற அதிகாரிகளிடம் நமீதா தகராறு செய்தார்.
இதனால் அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து,
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பணி செய்ய விடுங்கள் இல்லையேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அவரது கார் சோதனை செய்ய நமீதா ஒத்துழைப்பு கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து காரை சோதனை செய்த அதிகாரிகள், காரில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் நகை எதுவும் இல்லை என்பதால் காரை விடுவித்தனர்.
இதன் காரணமாக அந்தபகுதியில் பரபரப்பு நிலவியது.