திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், தேர்தல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, திருப்பூர் மாநகராட்சி தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் கடுமையான போட்டிகள் நிலவிய நிலையில், தனித்துப்போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டில் வேட்பாளராக திருப்பூர், ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி என்பவர் போட்டியிட்டார். இவருக்கு வெறும் 44 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் பெருந்தோல்வி அடைந்தார்.
கடன்வாங்கி செலவு செய்து தேர்தலில் போட்டியிட்ட நிலையில், தோல்வி அடைந்ததால், கடுமையான மனவேதனைக்கு ஆளானார். மேலும் கடன் கொடுத்தவர்களும் பணத்தை கேட்கத்தொடங்கியதால், மேலும் மனவேதனையால் அவதிப்பட்டார். இதுகுறித்து, அவரது குடும்பத்தினருக்கும் தெரிய வந்துள்ளது. அவர்களும் கடன்வாங்கி தேர்தலில் போட்டியிடனுமா என்று கேள்வி கேட்டுள்ளனர்.
இதனால் குடும்பத்தினருடன் கடந்த 2 நாட்களாக சரியான முறையில் பேசாமல் இருந்து வந்த மணி, இன்று காலையில் அவர், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து மணியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தோல்வி அடைந்ததால் கமல்ஹாசன் கட்சி வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.