டெல்லி:
தமிழ்நாட்டில் 16வது சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2021) மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான பணிகளை தொடங்க அகில இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அதன்படி ஊரடங்கு முடிவடைந்ததும் அடுத்த மாதம் தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால், இந்தியா திரும்ப முடியாமல், அங்கே சிக்கிக் கொண்டார். தற்போது, அவர் இந்தியா திரும்பிய நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் சில நாட்களில், அலுவலகம் வருவார் என எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில், பல மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து சக அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் விவாதித்து வரும் தலைமை தேர்தல் ஆணையர், அலுவலகம் வந்ததும் தேர்தல் பணிகளை முடுக்கி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு நவம்பரில், பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் தேர்தல் ஆணையம், 2021ம் ஆண்டு மே மாதத்திற்கு முன், தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகியவற்றுக்கான சட்டசபை தேர்தல்களை நடத்த வேண்டிய சூழலில் உள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவலால், அனைத்து பணிகளும் கடந்த சில மாதங்களாக முடங்கி உள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டு வரும் தளர்வுகளால், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்த மாத இறுதியுடன் ஊரடங்கு முடிவடைந்ததும், தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளும், மூன்று தேர்தல் ஆணையர்களும், மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலமாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
வரும் டிசம்பர் மாதத்திற்குள், தமிழக தேர்தல் ஏற்பாடுகளை முடிக்க வேண்டும் என்பது, தேர்தல் ஆணையத்தின் திட்டம். இதையடுத்து, தமிழகத்தில், ஏப்ரல் மாதத்தில், ஒரே நாளில் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.