டில்லி
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையும் சுதந்திரமும் சர்ச்சைக்குள்ளாகியதால் 11 முன்னாள் ஆணையர்களின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மட்டுமின்றி நம்பகத் தன்மையும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் வரும் 2019ஆம் வருடம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகிறது. அதையொட்டி தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலை நடத்த உள்ளது.
இந்நிலையில் வரவுள்ள பொதுத் தேர்தல் குறித்து ஆலோசனை அளிப்பதற்காக தேர்தல் ஆணையம் மே மாதம் 21ஆம் தேதி ஒரு கூட்டம் ஒன்றை கூட்ட உள்ளது. இந்த கூட்டத்துக்கு 11 முன்னாள் தேர்தல் ஆணையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் இந்த தகவலை ஒப்புக் கொண்டுள்ளார்.
முந்தைய தேர்தல்களின் போது அப்போதைய தேர்தல் ஆணையர்களுக்கு ஆட்சியாளர்களிடம் இருந்து வந்த அழுத்தம் குறித்தும் அதை அவர்கள் எவ்வாறு சமாளித்தார்கள் என்பது குறித்தும் கேட்டறிய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் தேதிகள் அறிவிப்பதில் நடந்த குழறுபடிகளும் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றிய புகார்களும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தற்போதுள்ள தேர்தல் ஆணையர்களுக்கு இதுவே முதல் பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஆகும். இதனால் இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணையர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் ஆணையர் சம்பத், “நாங்கள் இந்தக் கூட்டத்தில் திறந்த மனதுடன் எங்கள் கருத்துக்களை கூற எண்ணுகிறோம். தேர்தல் தேதி முன் கூட்டியே வெளியானதில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு விதத்தில் சம்மந்தம் இருக்கும் என நான் கருதுகிறேன். இது குறித்து விவாதிக்கும் போது தேர்தல் நேரத்தில் நடைபெறும் பல விவகாரங்கள் குறித்தும் அதன் தீர்வுகள் குறித்தும் ஒரு முடிவு காண முடியும். நாம் இருப்பது கண்ணாடி வீடு என்பதால் அனைத்தும் வெளிப்படையாக நடைபெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆணையர் கோபால்சாமி, “நான் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளப்ப் போவதில்லை. மே 21 ஆம் தேதி இந்தக் கூட்டம் எங்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களது சௌகரியத்தைப் பற்றி கேட்காமல் முடிவு எடுக்கப் பட்டுள்ளது. அது மட்டுமின்றி அந்தக் கூட்டத்தில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை” எனக் கூறி உள்ளார்.