சென்னை: 2024 பாராளுமன்ற தேர்தலில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான, செயல்விளக்கம் 2023, ஜனவரி 16ம் தேதி காண்பிக்கப்படுகிறது.  இதை காண வருமான  அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில், ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.  ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்யப்பட்டால், அது இந்திய தேர்தல் ஜனநாயகத்தையே சீர்குலைத்து விடும்” – விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.

பணி நிமித்தமாக வெளியூர்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தேர்தலுக்காக சொந்த ஊருக்கு வந்து வாக்களிப்பதை தவிர்த்து, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிக்கும் வகையில், ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு(RMV) எந்திரத்தை, தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கும் தொழிலாளர்கள் வசதிக்காக இயந்திரம் உருவாக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அத்துடன்,   ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்விளக்கம் 2023, ஜனவரி 16ம் தேதி காண்பிக்கப்படுகிறது. ஆதலால், அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும்,  அரசியல் கட்சிகளின் கருத்துக்கள், தொழில்நுட்ப சவால்கள், சட்டப்பூர்வசிக்கல்கள், நிர்வாக சவால்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்க கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

பொதுத்துறை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ரிமோட் வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம், ஒரு அறையில் அமர்ந்துகொண்டு 72 தொகுதிகளின் வாக்குப்பதிவையும் கையாள முடியும். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் மாநிலத்தேர்தலில் வாக்களிக்க சொந்தஊருக்கு வரத் தேவையில்லை.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல்ஆணையர் ராஜீவ்குமா,  “இளைஞர்கள்நலன், நகர்ப்புறங்களின் சூழல் ஆகியவற்றைப் பார்த்த பின்புதான் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் திட்டம் வந்தது. இந்த ரிமோட் வாக்கு எந்திரத்தின் மூலம் ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க முடியும். தொழில்நுட்பரீதியாக நாம் கண்டுபிடிக்கும் தீர்வு அனைவராலும் ஏற்கக்கூடியதாக, நம்பகத்தன்மைமிக்கதாக, ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.

இந்த திட்டம் நடைமுறைக்குவந்தால், சமூகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். இந்த ரிமோட் வாக்கு எந்திரம் குறித்து செயல்விளக்கம் அளிக்கவும், ஆலோசிக்கவும், 8தேசியக் கட்சிகள், 57 மநிலக் கட்சிகளை கலந்தாய்வுக்கு 2023,ஜனவரி 16ம்தேதிக்கு அழைத்துள்ளோம்.

இந்த வாக்கு எந்திரத்தின் தொழில்நுட்பக் குழுவினரும் இதில் பங்கேற்பார்கள். இந்த எந்திரம் குறித்த தங்கள் கருத்துக்களை, செய்ய வேண்டிய மாற்றங்களை, சந்தேகங்களை அரசியல் கட்சிகள் ஜனவரி 31ம் தேதிக்குள் தெரிவிக்கவேண்டும்.

வாக்களிப்பில் ரகசியத்தன்மை காத்தல், வாக்கு மைய ஏஜென்ட்களுக்கான வசதிகள், ஆகியவை உறுதி செய்யப்படும். கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 67.4 சதவீத வாக்குகளே பதிவானது. 30 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.

ஒருவாக்காளர் தனது சொந்தஊரில் தனது வாக்காளர் பெயரை சேர்க்காமல் விடுபட்டதற்கு பலகாரணங்கள் உள்ளன, அதனால் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும். ஒரு இடம்விட்டு மற்றொரு இடத்துக்கு  பிழைப்பு தேடிச் செல்லும்போதுகூட வாக்களிக்கும் உரிமையை இழக்கலாம். இந்தத் திட்டம் அமலுக்குவந்தால் யார் எங்குவேண்டுமானாலும் இருந்து வாக்களிக்கலாம். ” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு:

தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவுக்கு கடுமையாக பதிலளித்த காங்கிரஸ், மின்னணு இயந்திரங்களை (EVM) தவறாகப் பயன்படுத்துமோ என்ற அச்சத்தை முறைப்படி நிவர்த்தி செய்யாமல் அதை வெளியிடுவது, அமைப்பின் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் என்று கூறியது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முறையின் மீதான மக்களின் நம்பிக்கையானது, தேர்தல் ஆணையத்தின் மீது மத்திய அரசால் கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக மீண்டும் மீண்டும் மீறப்பட்டுள்ளது.

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன, துரதிர்ஷ்டவசமாக, அவற்றின் தவறான பயன்பாடு குறித்த அச்சங்கள் முறையாக கவனிக்கப்படவில்லை. வாக்காளர்களும் கட்சிகளும் தேர்தல் முறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.

இந்த சந்தேகத்திற்கிடமான முறையை, பல தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மற்ற இடங்களுக்கு நீட்டிக்க முடியுமா என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள். இது அமைப்பின் மீதான நம்பிக்கையை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல தொகுதிகளின் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டை நிரூபிக்க, ஜனவரி 16 அன்று, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அவர்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்களைக் கேட்டுள்ளதாகவும் வியாழனன்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்தல்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முன்மொழியப்பட்ட திட்டம் உள்நாட்டில் இடம்பெயர்வு காரணமாக வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதைத் தவறவிடாமல் தடுக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சியின் யுகத்தில் இடம்பெயர்வு காரணமாக உரிமையை மறுப்பது ஒரு விருப்பமல்ல என்று அது கூறியது.

இதனிடையே தேர்தல் ஆணையத்தை விமர்சித்த காங்கிரஸ், சமீபத்திய குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை மேற்கோள் காட்டியது. மேலும் பிரதமர் மோடிக்கு தனது சொந்த மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவதற்காக தேர்தல் அட்டவணையை அறிவிப்பதில் தாமதம் செய்ததாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பை குற்றம் சாட்டியது.

பிரச்சினைக்குப் பிறகு, தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. குஜராத்தில், இந்த முறை, சந்தேகத்திற்கிடமான வாக்கு எண்ணிக்கையை நாங்கள் பார்த்தோம், இது கடைசி நேரத்தில் 10-12% வாக்காளர்கள் வாக்களித்ததைக் காட்டுகிறது என்று அக்கட்சி கூறியது.

இது ஒவ்வொரு வாக்கையும் அளிக்க 25-30 வினாடிகள் எடுத்துக் கொள்ளப்பட்டதை காட்டுகிறது, ஆனால் உண்மையில் இப்படி நடப்பது சாத்தியமற்றது. இந்த சந்தேகத்திற்கிடமான வடிவங்களை பல தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மற்ற இடங்களுக்கு நீட்டிக்க முடியுமா என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள். இது அமைப்பின் மீதான நம்பிக்கையை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று ரமேஷ் கூறினார்.

தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளின் கவலைகளை நேர்மையாக பரிசீலிப்பது, தேர்தல் முறையில் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும் என்று காங்கிரஸ் மேலும் கூறியது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,  , “மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து வாழ்வோர், தங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே வாக்களிக்கும் விதமாக ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஜனநாயகத்தையே சீர்குலைத்து விடும் இந்தியாவில் சுமார் 30 கோடி பேர் இப்படி புலம் பெயர்ந்து புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாக்குகளை குறிவைத்தே இந்த இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவிஎம் இயந்திரத்தில் பல்வேறு குளறுபடிக்ள் நடப்பதகா புகார் எழுந்துள்ள நிலையில், ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் இயந்திரம் அறிமுகம் செய்தால் இந்திய தேர்தல் ஜனநாயகத்தையே அது சீர்குலைத்து விடும். எனவே இந்த முயற்சிகளை கைவிட வேண்டும் என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.