ஜெய்ப்பூர்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தானில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. அங்கு நாளை (25ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன் காரணமலாக வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகளை இன்று பிற்பகல் அனுப்புவதற்கான நடைமுறைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடைவதால், புதிய சட்டப்பேரவையை தேர்ந்தெடுக்க நவம்பர் 25ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக பகீரத பிரயத்தனம் செய்து வரும் நிலையில், ஆட்சி தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகிறது.
அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, ராகுல்காந்தி, பிரியங்கா, கார்கே உள்பட பாஜக தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளுக்கும் வருகிற 25 ஆம் தேதி (நாளை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆட்சியை கைப்பற்றப்ப்போவது யார் என மக்கள் தீர்மானிக்க உள்ள நிலையில், அங்கு கடந்த ஒரு மாதமாக தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சாரம் நேற்று மாலை 6மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, வெளிமாநிலத்தவர்களை அங்கிருந்து வெளியேற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் உள்பட தேவையான பொருட்களை அனுப்புவதில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஏற்கனவே மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது. வருகிற 25 ஆம் தேதி ராஜஸ்தானிலும், நவம்பர் 30 ஆம் தேதி தெலங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளன.