இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த 70 விழுக்காடு மக்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, இதய பிரச்னை ஆகியவற்றில் ஏதேனும் ஓன்று இருந்துள்ளது. இந்த ஆய்வு முடிவிற்கு மருத்துவ நிபுணர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே இதுபோன்ற பிரச்சினை உள்ள மக்களுக்கு நோயின் தொற்று எளிதில் பரவ வாய்ப்பு உள்ளது. அதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் என்று அறிவுறுத்தி உள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பி துறை (Department of Endocrinology) தலைவரும், பேராசிரியருமான மருத்துவர் நிகில் டாண்டன், “கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு ஆளாகும் முதியோர்கள், நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் குணமடைவதில் சிரமம் இருப்பதாகவும், அவர்களின் உயிரிழப்புக்கு சாதாரண நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களை விட 50 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்து உள்ளார்.
இவர்கள் மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய், சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று பரவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதியோர்கள் தகுந்த முன்னெச் சரிக்கை நடவடிக்கைள் மற்றும், உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது, வீட்டிலேயே உடற்பயிற்சிகள் செய்வது போன்ற செயல்கள் மூலம் உடலை சீராக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய நிலையில், இந்தியாவில் மட்டுமே 77 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி குறித்து வெளியிடப்பட்டஆய்வு முடிவுகளில், இருதய நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சுவாச நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சராசரி இறப்பு விகிதத்தை விட அதிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்து உள்ளது. மேலும், இறப்பு விகிதத்தில் ஆண்களே அதிகம் என்றும் தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்றால் பலியானவர்களில் 26 சதவிகிதம் பேர் 60 வயது மேற்பட்டவர்கள் என்றும் தெரிவித்து உள்ளன.