சென்னை: தமிழகஅரசு முதியோர்களுக்கு வழங்கும் பேருந்து இலவச பயணத்திற்கான இலவச பயணச் சீட்டு டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதியோர்களுக்கான இலவச பேருந்து டோக்கன், கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், இன்றுமுதல் முதியோர்கள் கட்டணமில்லா பயண டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், டோக்கன் பெறுவதற்காக, www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகுதிவாய்ந்த முதியவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள மையங்களில் டோக்கன்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள 21 பணிமனைகள் மற்றும்19 பேருந்து நிலையங்களில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். முதியவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 10 வீதம், ஆறு மாதங்களுக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.