காஞ்சிபுரம்:  பரந்தூர் பசுமை  விமான நிலையத்திற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஏகனாபுரம் மக்கள் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடைபெற்ற  கிராமசபை கூட்டத்தில், விமான நிலையத்துக்கு எதிராக  17வதுமுறையாக தீர்மானம் நிறைவேற்றினர்.

ஜனவரி 26 குடியரசு தினத்தைமுன்னிட்டு பல பகுதிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி,   காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் 17வது முறையாக தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக  தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதிரயில் உள்ள பல கிராமங்கள் , நீர் நிலைகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதை மீறி அரசு நிலத்தை கைப்பற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அத்துடன்,  குடியிருக்கும் வீடுகளை வழங்கும் கிராம மக்களுக்கு வழங்குவதற்கு, மாதிரி வீடுகளும் கட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அப்பகுதி மக்கள்  தங்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்படும் எனக்கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல்,பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும்,   6 முறை கிராம சபை கூட்டங்களை புறக்கணித்தும், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தும், 16 முறை கிராமசபை கூட்டத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் தங்கள் எதிர்ப்பினை  பதிவு செய்து வருகின்றனர்.

 இந்த நிலையில், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த வகையில், ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த  கிராம சபை கூட்டத்தில் ஏகனாபுரம் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகள் முன்னிலையில் 17வது முறையாக கிராம சபை கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி, தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

[youtube-feed feed=1]