இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் ஒருமாதமாக நீடித்து வரும் நிலையில் இதுவரை சுமார் 10000க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
காசா பகுதி முற்றிலும் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள உண்மை நிலவரம் சரியாக தெரியவில்லை.
இந்த நிலையில் காசா பகுதியில் காயமடைந்து மருத்துவ உதவி கிடைக்காமல் போராடி வரும் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை எகிப்து அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையே இதுகுறித்து கத்தார் அரசு சமரச பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த சமரச பேச்சுவார்த்தையை அடுத்து காசா பகுதியில் காயமடைந்த 81 பேர் கொண்ட முதல் குழுவினர் ராஃபா வழியாக இன்று அனுமதிக்கப்பட்டனர்.
வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சுமார் 500 பேர் இந்த போரில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை எகிப்த்தின் ராஃபா-வில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஷேக் சுவெய்த் எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ உதவி மையங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலையில் மிகவும் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களை அருகில் உள்ள நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.